Monday, February 8, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 71

71. திரைக்கதை எழுதிய பின்...!

கதைக் கருவில் ஆரம்பித்து, பீட் ஷீட்டைத் தாண்டி, வசனத்தை எழுதி திரைக்கதையை ஒருவழியாக முடித்துவிட்டீர்கள். முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்!

’அடுத்து என்ன செய்வது?’எனும் கேள்வி மிகவும் பூதாகரமாக எழுந்து நிற்கும் நேரம் இது. ஏதோ இத்தனை நாள் ‘ஸ்க்ரிப்ட் எழுதறேன்’ என நண்பர்களிடமும், வீட்டிலும் படம் போட்டாகிவிட்டது. கல்லூரியில் கடைசி நாளில் ஒரு பயம் அடிவயிற்றைக் கவ்வுமே, அதே ஃபீலிங்கை மீண்டும் அடைந்திருப்பீர்கள். இனி செய்ய வேண்டியவை பற்றி, சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

1. திரைக்கதையை தயார் செய்யுங்கள்:

எழுதி முடித்த திரைக்கதையில் இருக்கும் எழுத்துப்பிழைகளைத் திருத்துங்கள். ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால், செய்யுங்கள். நல்ல தோற்றம் வந்தவுடன், ப்ரிண்ட் செய்யுங்கள்.

2. ஆடியன்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:

'சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவது, திரைக்கதை பற்றி தொடர் எழுதுவது அல்லது அதைப் படிப்பது, ஃபேஸ்புக்/ட்விட்டரில் தீவிரமாக புரட்சி செய்வது' போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாத, ஆனால் சினிமா பார்க்கும் ஆர்வமும் படிக்கும் பழக்கமும் உள்ள நண்பர்கள் அல்லது சொந்தங்களை தேடிப்பிடியுங்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான ஆடியன்ஸ். அவர்களிடம் முதலில் உங்கள் ஸ்க்ரிப்ட்டைக் கொடுங்கள். சிலருக்கு சினிமா என்றாலே வெறுப்பு இருக்கும். அந்த மாதிரி நபர்களிடம் சிக்காமல், நல்ல படம் வந்தால் தியேட்டருக்கு ஓடும் ஆட்களிடம் மட்டும் கொடுங்கள். உங்கள் ஜெனருக்கு ஏற்ற ஆட்களை அதிகமாகப் பிடிப்பதும் நலம்.

அவர்கள் படித்து முடித்ததும், அவர்களை நேரில் சந்தித்து ‘உண்மையான’ கருத்தை கேட்டு வாங்குங்கள். ‘நல்லா இருக்குப்பா’ அல்லது ‘நல்லா இல்லைப்பா’ என்று ஒருவரியில் தப்பிக்க விடாதீர்கள். ஃபோனில்/மெயிலில் கேட்டால், அந்த பதில் தான் கிடைக்கும். எனவே நேரில் சந்தித்து, ’எந்த சீகுவென்ஸ் போரடித்தது/நன்றாக இருந்தது? இருப்பதிலேயே எது பெஸ்ட்/ஒர்ஸ்ட்?’ என்று முடிந்தவரை கேட்டு வாங்குங்கள். அவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

3. எக்ஸ்பர்ட்ஸின் கருத்துக்களைக் கேளுங்கள்:


உலக சினிமா, சினிமா விமர்சனம், திரைக்கதை என்றெல்லாம் உருண்டு புரளும் ஆட்களைப் பிடியுங்கள். அவர்களால் நேரம் ஒதுக்கி, உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படிக்கா முடியுமா என்று கேளுங்கள். உங்கள் திரைக்கதையில் உண்மையிலேயே சில டெக்னிகல் பிரச்சினை இருக்கலாம். அதை இவர்கள் சொல்லலாம். இதே போன்ற சாயல் உள்ள அயல் சினிமாக்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கலாம். இதே போன்ற டெக்னிகல் பிரச்சினையால் தோல்வியடைந்த படங்களின் விபரங்களும் உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் திரைக்கதை ஸ்ட்ரக்சரில் உள்ள பிரச்சினைகள், ஃபண்டமெண்டலில் உள்ள பிரச்சினைகள் பற்றி இவர்களிடம் கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள். இவர்கள் சொல்வதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

4. கருத்துக்களை ஆராயுங்கள்:

எப்போதும் ஒரே ஒரு ஆளின் கருத்தை மட்டும் கேட்காதீர்கள். மேலே சொன்னபடி, பலவகையான ஆட்களின் கருத்துக்களைப் பெறுங்கள். இப்போது, ஒரே மாதிரி கமெண்ட்கள் வந்திருக்கின்றனவா என்று பாருங்கள். உதாரணமாக, ஆடியன்ஸில் மூன்று பேர் ‘அந்த மர்டர் சீன்ல இருந்து, ஸ்க்ரிப்ட் செம ஸ்பீடு’ என்று சொல்லியிருக்கலாம். எக்ஸ்பர்ட்களில் சிலர் ‘செட்டப் ஸ்லோ & க்ளிஷே..கால் ஃபார் அட்வென்ச்சரில் இருந்து செம!’ என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் அனைவரும் சொன்னதன் அர்த்தம் ஒன்று தான். ஆக்ட்-1 செட்டப்பில் பிரச்சினை இருக்கிறது. அதன்பின் திரைக்கதை நன்றாகச் செல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ‘காமெடி சுமார்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘காமெடி ஓகே/சூப்பர்’ என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் மெஜாரிட்டி கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, திரைக்கதையில் மாற்றங்களைச் செய்யுங்கள். (மறுபடியுமா!!)

5. கதைத் திருட்டு எனும் அபாயம்:

மேலே சொன்னதைச் செய்வதில் உள்ள ஒரே சிக்கல், உங்கள் கதை களவு போகலாம். சிலர் தெரிந்தே திருடலாம்; சிலர் அறியாமல் உங்கள் கதையை லீக் செய்துவிடலாம். கதை, கவிதை, தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள வாத்தியாரான என் உறவினர் ஒருவரிடம் ஒரு திரைக்கதை ஆடியன்ஸ் ஒப்பீனியனுக்காக வந்தது. படித்து கருத்தை சொல்லிவிட்டார். பிறகு நான் அவரைச் சந்தித்தபோது, விலாவரியாக அந்த கதையைச் சொன்னார். ’இப்படி வெளியில் சொல்லாதீர்கள்’ என்று அறிவுரை சொன்னேன். அதில் இருக்கும் கதைத்திருட்டு ஆபத்து அவருக்கு புரியவேயில்லை. (அதுவொரு மொக்கைக்கதை என்பது வேறுவிஷயம்!) தமிழ் சினிமாவில் தெரிந்தே நடக்கும் கதைத்திருட்டு பற்றியும் நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். மிகவும் நம்பிக்கையான ஆட்களிடம் மட்டும் திரைக்கதையைக் கொடுங்கள்.

6. பட்ஜெட் எனும் பூதம்:

உங்கள் முதல் திரைக்கதையை நம்பி பலகோடிகளை முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள். ‘ஓப்பன் செய்தால், ஒரு ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகிறது. அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் வேகமாக அந்த ஃப்ளைட்டை நோக்கி வருகின்றன. டமார்...டைட்டில் போடுறோம் சார்’ என்று கதை சொன்னால், ஒரு கும்பிடு போட்டு அனுப்பிவிடுவார்கள்.

எனவே உங்கள் ஸ்க்ரிப்ட்டைப் படமாக்க என்ன பட்ஜெட் ஆகும் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். கோலிவுட்டில் இதற்கென எக்ஸ்பெர்ட்ஸ் உண்டு. அல்லது, இதே போன்ற படங்கள் என்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்ள முயலுங்கள். ஜிகர்தண்டாவிற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தான் பீட்சா கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதினார். எனவே, முதல் திரைக்கதையை அளவான பட்ஜெட் கொண்டதாக உருவாக்குங்கள்.

7. உங்கள் பயோ-டேட்டா:

எவ்வளவோ பேர் திரைக்கதை எழுதுகிறார்கள், வாய்ப்புக்காக அலைகிறார்கள். அப்படி இருக்கும்போது, உங்களை ஏன் ஒரு தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்? ‘சூப்பர் கதை...திறமை’ என்பதையெல்லாம், உங்கள் முதல் படம் வெளியான பிறகே தெரிந்துகொள்ள முடியும். முதல் பட வாய்ப்பு தானே பிரச்சினையே? எனவே ‘நீங்கள் யார், ஏன் உங்களை தயாரிப்பாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்?’ என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு பயோடேட்டா தேவை.

நீங்கள் யாரிடமாவது உதவி இயக்குநராக இருந்தால், அதைக் குறிப்பிடுங்கள். ’ரெஃபரென்ஸ்/ரெகமண்டேசன்’ அளவுக்கு சினிமாவில் கைகொடுப்பது வேறில்லை. (மோசமான திரைக்கதை இருந்தாலும், வாய்ப்பை வாங்கிவிட முடியும் சோக சூழல்!)

உதவி இயக்குநரோ இல்லையோ, ஷார்ட் ஃபிலிம் எடுங்கள். வெரைட்டியான ஜெனர்களில் எடுங்கள். அதில் சிறந்த ஐந்து படங்களை இணையுங்கள். உங்கள் விஷுவல் குவாலிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.

நீங்கள் ஏதேனும் கதை, கவிதை, நாவல் அல்லது சினிமா பற்றி புத்தகங்கள் எழுதியிருந்தால், அதையும் குறிப்பிடுங்கள். உங்கள் க்ரியேட்டிவிட்டிக்கு ஆதாரமாக அவை இருக்கும்.

இவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். யாரும் பயோடேட்டாவை பேப்பரில் கேட்பதில்லை. பேசும்போதே, மேலே சொன்னவற்றை சரியான பில்டப்புடன் நீங்களே சொல்லுங்கள். ஆதாரங்களை அவர்கள் முன் வைத்து, வாய்ப்புக் கேளுங்கள்.

தமிழ் சினிமாவில், வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!


8. விளம்பரம்:

நமது தலைமுறையின் பெரும் வரப்பிரசாதம், இணையம் தான். முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கதை அனுப்பி, பிரசுரம் ஆகுமா என்று காத்திருக்க வேண்டும். இப்போது நீங்களே இணையத்தில் கதை, கவிதை, கட்டுரை, ஷார்ட் சிலிம் என எல்லாவற்றையும் பிரசுரிக்கலாம். வலைப்பூ, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை உங்களை விளம்பரப்படுத்தும் ஒன்றாக பயன்படுத்துங்கள். இணையம் போன்ற சில விஷயங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவை நம்மை பயன்படுத்திவிடும். சினிமா தொடர்பான ஆட்களின் நட்பு வட்டத்தில் இணையுங்கள். இணையத்தில் விழிப்பாக இருந்தால், சில நல்ல நட்புகளை கண்டறியலாம்.

உங்களைப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள விரும்பினால், இந்த சுட்டிகளை நீங்கள் கொடுக்கும் அளவிற்கு பிம்பத்தை மெயிண்டெய்ன் செய்யுங்கள். (வீட்டுக்காரர் அனுமதியுடன் மட்டுமே இணையத்திற்கு வந்து புரட்சி செய்யும் பெண்ணியவாதி ஒருவரை நான் அறிவேன்..அது!)

9. டீம் ஒர்க்:


சினிமா என்பது ஒரு டீம் ஒர்க். நீங்கள் ஒருவரே அஷ்டவாதானியாக எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். நல்ல டெக்னிகல் நட்பு வட்டத்தை உருவாக்குங்கள். நடிப்பு, இயக்கம், ஒளிபதிவு, எடிட்டிங் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரைக் கண்டுபிடித்து இணைந்துகொள்ளுங்கள். இன்றைக்கு சினிமாவைக் கலக்கும் கார்த்திக் சுப்புராஜ்-விஜய் சேதுபதி-நலன் - பாபி சிம்ஹா எல்லாம் அப்படி ஒன்றாக கிளம்பி வந்தவர்கள். அப்படி ஒரு நல்ல டேலண்ட்டான ஆட்கள் கிடைத்தால், உங்கள் திரைக்கதை அவர்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

 10. திரைக்கதை புத்தகங்கள்:
எப்போதும் ஏதேனும் ஒரு திரைக்கதை புத்தகத்தை படித்துக்கொண்டே இருங்கள். ஒரு திரைக்கதை எழுதியபின், மீண்டும் இந்த தொடரைப் படியுங்கள். சில நண்பர்கள் ஆங்கிலப் புத்தகங்களின் பெயரைக் கேட்டார்கள். இந்த தொடருக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் உதவிய புத்தகங்களை பட்டியலிடுகிறேன். இவற்றைப் படியுங்கள்:

1. Save the Cat! The Last Book on Screenwriting You'll Ever Need - By Blake Snyder

2. Save the Cat! Goes to the Movies: The Screenwriter's Guide to Every Story Ever Told - By Blake Snyder

3. Save the Cat! Strikes Back: More Trouble for Screenwriters to Get Into… and Out Of - By Blake Snyder

4. Screenplay - Syd Field

5. The Art of Dramatic Writing - By Lajos Egri

6. Alternate Scriptwriting - By Ken Dancyger & Jeff Rush
7. Story - By Robert Mckee
8. Blue Print for Screenwriting - By Rachel Ballon
9. The Coffee Break Screenwriter - Pilar Alessandra
10. Screenwriting : Sequence Approach - By Andrew Marlowe 


11. அடுத்த திரைக்கதை:

ஒரு திரைக்கதை வேலை முடிந்ததும், உடனே அடுத்த வேலையை ஆரம்பியுங்கள். பெரும்பாலான இடங்களில் கதை சொல்லும்போது, ‘வேறு கதை இருக்கிறதா?’எனும் கேள்வியும் வருகிறது. மேலும், தொடர்ந்து திரைக்கதைகளை எழுதும்போது தான் இந்த தொடரில் உள்ள விஷயங்களையும் பழைய படங்களையும் ரெஃபரென்ஸாக பயன்படுத்துவது இயல்பானதாக ஆகும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்!

நாளை, இறுதியாகச் சில விஷயங்களைப் பார்ப்பதுடன் தொடரை நிறைவு செய்வோம்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.