Thursday, October 22, 2015

10 எண்றதுக்குள்ள - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
கோலி சோடா எனும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் விஜய் மில்டனும் நடிப்புக்காக எந்த எல்லைக்கும் போகத் துணியும் சீயான் விக்ரமும் இணைந்து கொடுத்திருக்கும் படம். கூடவே ஏ.ஆர்.முருகதாஸ் தாயாரிப்பு என்பதும் சேர, அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்....

ஒரு ஊர்ல :
ஒரு பொருளை, அது என்னவாக இருந்தாலும், சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்தில் கொண்டு சென்று சேர்க்கும் ட்ரான்ஸ்போர்ட்டர் விக்ரம். சமந்தாவையும் அப்படி நார்த் இண்டியா வில்லன்களிடம் கொண்டுபோகும் ரோடு மூவி தான் 10 எண்றதுக்குள்ள.

உரிச்சா:
பையா வெற்றிக்குப் பின்னும் அதிக அளவில் ரோடு மூவி தமிழில் வரவில்லை. காரணம், மிகவும் ரிஸ்க்கான ஜெனர் இது. கொஞ்சம் திரைக்கதை சுணங்கினாலும் ’என்னய்யா இது, போய்க்கிட்டே இருக்காங்க’ எனும் சலிப்பு ஈஸியாக ஆடியன்ஸிற்கு வந்துவிடும். விஜய் மில்டன் துணிந்து அந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார்.

வட இந்தியாவில் நடக்கும் ஒரு சாதிப்பிரச்சினையுடன் படம் ஆரம்பம் ஆகிறது. கதையின் மையமே அந்தப் பிரச்சினை தான். படத்திற்கு பிரச்சினையும் அது தான். வட இந்தியா, ஆவோஜி-பாவோஜி டப்பிங் வசனங்களால் அந்தப் பிரச்சினை பெரிய இம்பாக்ட்டை கொடுக்கவில்லை. விக்ரமும் சமந்தாவும் வட இந்தியா நோக்கி நகரும்போதெல்லாம்,இடையிடையே அந்த பிரச்சினையைக் காட்டுகிறார்கள். ஆனாலும் ஒட்டாமல் அது தனித்து நிற்கிறது.

அட்டகாசமான ஓப்பனிங்குடன் விக்ரம் அறிமுகம் ஆகிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. பசுபதியுடன் அவர் கூட்டு சேர்வது கலகலப்பு என்றால், சமந்தாவிற்கு டிரைவிங் சொல்லிக்கொடுப்பது அட்டகாசமான காமெடி போர்சன். அதற்கெல்லாம் தியேட்டரில் நல்ல வரவேற்பு.

பாண்டிச்சேரியில் இருந்து ஒரு காரை எடுத்து வா என்றால், அதில் என்ன இருக்கிறது என்றுகூட கேட்காமல் எடுத்துவந்து, கூலியை மட்டும் வாங்கிச்செல்லும் சின்சியர் கேரக்டர் விக்ரம். அதே போன்று காரில் சமந்தா இருப்பதை அறியாமல், வட இந்தியா நோக்கி கடத்துவது நல்ல கான்செப்ட். வழியில் விக்ரமுக்கே தெரியாமல், காரில் இருந்து ஆந்திரா வில்லன்களால் சமந்தா கடத்தப்பட, விக்ரம் அவரைக் காப்பாற்றுகிறார். சமந்தாவையும் அழைத்துக்கொண்டு, உத்தரகாண்ட் நோக்கி நகர்கிறார் விக்ரம். கடத்தப்படுவதே சமந்தா தான் என்று தெரியாமல், விக்ரமும் சமந்தாவும் பயணத்தை ஆரம்பிப்பது சுவாரஸ்யமான விஷயம்.

ஆனால் தெலுங்கானா பாடல் காட்சியில் இருந்தே, படம் நமக்கு அந்நியமாகிவிடுகிறது. ஏறக்குறைய பையா படத்திலும் இதே கதைக்களம் தான். ஆனால் தான் காதலிக்கும் பெண்ணே, ஹீரோவிடம் லிஃப்ட் கேட்க, ஒன்றாக பயணித்தால் அவள் மனதை கொள்ளையடிக்கலாம் எனும் ஹீரோவின் குறிக்கோளுடன் படம் பயணித்தது. இங்கே பிரச்சினை, ஹீரோவுக்கு காரை உத்ரகாண்டில் விட வேண்டும் என்பது தான் குறிக்கோள்..அல்ல, அது வேலை. எனவே எமோசனலாக நாம் இன்வால்வ் ஆக முடிவதில்லை. ஆந்திராவில் இருந்து நார்த் இந்தியா வரை பயணத்தில், விக்ரமும் சமந்தாவும் சண்டியிடுகிறார்கள், காதலிக்கிறார்கள், என்னென்னவோ நடக்கிறது. இண்டர்வெல் ப்ளாக்கில் இன்னொரு வில்லன் கோஷ்டியும் சமந்தாவைத் தேடுவதாக காட்டுகிறார்கள். ஆனாலும் படத்தின் மீதான இண்டரெஸ்ட்டே இல்லாமல் தான் அதைப் பார்க்கிறோம்.

இண்டர்வெல்லுக்கு அப்புறமும் பயணம் நீண்டு, ஒரு வழியாய் சமந்தாவைக் கேட்ட வில்லனை விக்ரம் அடித்துத் துவைக்கிறார். ‘நான் மெயின் வில்லன் இல்லை..இன்னொருத்தன் இருக்கிறான். படம், இன்னும் இருக்கிறது’ என்று அந்த வில்லன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறான். இன்னுமா என்று நாம் அதிர்ச்சியாகும்போது, சாதிப்பிரச்சினை சமந்தாவுடன் லின்க் ஆகிறது. அதற்குப் பிறகு, படம் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆவது தான் ஆச்சரியம். அதில் இருந்து கிளைமாக்ஸ்வரை, பல சர்ப்ரைஸ்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மொத்தத்தில் முதல் அரைமணி நேரமும், கடைசி அரைமணி நேரமும் கலக்கல். இடையில் எமோசன் இல்லாத நெடும் பயணம்.

விக்ரம்:
ஜாலியான, கேஷுவல் கேரக்டரில் விக்ரமை ரசிக்க முடிகிறது. பயணம் ஆரம்பம் ஆகும்வரை செம ரவுசு. பசுபதியை இவர் டீல் செய்யும் விதமே அழகு. வயது முகத்தில் எட்டிப்பார்த்தாலும், ஆக்டிவ்வாக இருக்கிறார். கார் சேஸிங்கில் ரிஸ்க் எடுத்து கலக்கியிருக்கிறார்.

சமந்தா:
டிரைவிங் கற்றுக்கொள்வதாகக்கூறி அவர் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி. க்யூட், மக்குப் பெண்ணாக மனதைக் கொள்ளை கொள்கிறார். ஆனால் இரண்டாம்பாதியில் ஆக்ரோசமாக அவர் வருவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. பக்கவாதம் வந்தவர் போல், ஒரு பக்கம் வாயை இழுத்துக்கொள்வது தான் ஆக்சன்ன்ன் என்று யார் சொன்னார்களோ! அனுஷ்கா அளவிற்கு இல்லாவிட்டாலும், பாகுபலி தமன்னா அளவிற்காவது ஆக்ரோசம் காட்டியிருக்கலாம். ஒரு பாதியில் கலக்கி, மறுபாதியில் சொதப்பிவிட்டார்.

பசுபதி:
படத்தைக் காப்பாற்றும் இன்னொரு ஜீவன். தனது அக்மார்க் நடிப்பால், எப்போதும் போல் இப்போதும் நம்மைக் கவர்கிறார். அவரது ஓப்பனிங் சீனும், விக்ரமுடன் அவர் வரும் காட்சிகளும் சுவாரஸ்யம்.
 
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- ரோடு மூவி. பையா தவிர்த்து, அன்பே சிவம்-நந்தலாலா-மதுரை டூ தேனி என பெரும்பாலான ரோடு மூவீஸ் கமர்சியலாக ஃப்ளாப் தான். ரோடு மூவி பார்க்க, கதையை அதிகம் எதிர்பார்க்காத மனநிலை வேண்டும். பயணத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இங்கே முக்கியம். அது தமிழ் கமர்சியல் சினிமாவில் இன்னும் ரிஸ்க்கான விஷயமாகவே இருக்கிறது.
- கொட்டாவி வர வைக்கும், கதையை கொஞ்சமும் நகர்த்தாத நீண்ட பயணக்காட்சிகள். ஆந்திரா பாடலில் தூங்கி உத்ரகாண்டில் நாம் முழித்துப் பார்த்தால், கண்டினியூட்டி பக்காவாக இருக்கும்.
- ஹிந்தி டப்பிங் சீரியல் எஃபக்ட்டைக் கொடுக்கும் வட இந்தியா காட்சிகள்
- எதற்காக இந்த கடத்தல் என்பதை மிக லேட்டாக சொன்னது. அது தெரிந்தபின் தான் படத்துடன் இன்வால்வ் ஆகிறோம்.
- ’இரண்டாம்பாதி’ சமந்தா
- மோசமான கிராஃபிக்ஸ்


 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் தான் படத்தின் உண்மையான ஹிரோக்கள். ஆரம்பத்தில் விக்ரமை பசுபதி டீம் விரட்டும் சேஸிங்கில், ஒளிப்பதிவாளர் பாஸ்கரனும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் போட்டி போட்டு உழைத்திருக்கிறார்கள்.
- விக்ரம்...என்ன ஒரு எனர்ஜி!
- முதல்பாதி சமந்தாவின் காமெடி சேட்டைகள்
- இமானின் துள்ளலான பாடல்கள்
- முதல் மற்றும் கடைசி அரைமணி நேரம்

பார்க்கலாமா?
 
ரோடு மூவி பிரியர்கள் மட்டும்............பார்க்கலாம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.