Saturday, July 18, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 53

ஜெனர் - குற்றம் & மர்மம்

  ஒரு குற்றம் நடந்துவிடுகிறது. அதன்பின், குற்றவாளி பிடிபட்டானா இல்லையா என்று அலசும் கதைகள் இவை. அல்லது, ஒரு குற்றம் நடக்கப்போகிறது. அது தடுக்கப்பட்டதா, இல்லையா என்று சொல்பவை இவ்வகை ஜெனர் படங்கள். மொத்தத்தில்  ஒரு குற்றத்தை மையப்படுத்தி நகரும் கதைகளே, க்ரைம் /மிஸ்ட்ரி ஜெனர் ஆகும்.

கொலை, திருட்டு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தான் இவ்வகைக் கதைகளின் ஆரம்பப் புள்ளி. ஒரு குற்றம் நடக்கிறதென்றால், அங்கே மூன்று தரப்புகள் இருக்கும். ஒன்று, குற்றவாளி. இரண்டாவது, போலீஸ்/துப்பறிபவர். மூன்றாவது, குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுஜனம்.

 இப்போது க்ரைம் ஜெனரின் வகைகளைப் பார்ப்போம்:

1. டிடெக்டிவ் கதைகள்:
இங்கே ஹீரோ போலீஸாகவோ, சி.ஐ.டியாகவோ, துப்பறியும் நிபுணராகவோ வரலாம். ஆனாலும் இவை அட்வென்ச்சர் படங்கள் அல்ல. இந்த ஜெனர் படங்கள் ரியாலிட்டியோடு நகரும். ஜேம்ஸ்பான்ட் ஸ்டைல் சாக்சங்களை ஹீரோ செய்வதில்லை. உதாரணம், வேட்டையாடு விளையாடு.

வேட்டையாடு விளையாடு படத்தில் இளம்பெண்கள் கற்பழித்து, கொல்லப்படுகிறார்கள். அதை போலீஸ்காரரான கமல் துப்பறிகிறார். ஹீரோ வீரன் தான். ஆனால் படம் ஹீரோயிசத்தை தூக்கிப்பிடிப்பதில்லை, முழுக்க முழுக்க குற்றமும் குற்றவாளிகளின் நகர்வும் தான் படத்தின் முக்கியமான அம்சங்கள். ஹீரோயிசம் ஒரு அளவிற்குத்தான், அதற்கு மேல் போகும்போது ஹீரோவுக்கே அடிவிழும். ஏறக்குறைய, ஒரு உண்மையான போலீஸ்காரரின் வாழ்க்கையைச் சொல்வதாகவே ஹீரோ கேரக்டர் படைக்கப்பட்டிருக்கும்.

ஹீரோவுக்கு சொந்தப் பிரச்சினைகளும் இருக்கும். அஞ்சாதே நரேனுக்கு நட்பில் பிரச்சினை, வே.வி.கமலுக்கு மனைவியின் இழப்பும் ஜோதிகாவின் டைவர்ஸ் பிரச்சினையும்.

இந்த வகையில் வில்லனுக்கு தெளிவான பின்கதை இருக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் சைக்கோ பிரச்சினைகள் வில்லனுக்கு இருக்கும். இதில் யுத்தம் செய் படமும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. 

 உண்மை என்று ஒரு மலையாள டப்பிங் படம் உண்டு. மம்முட்டி ஹீரோவாக நடித்திருந்தார். கதை, ராஜீவ் காந்தி கொலைச்சம்பவத்தை இன்ஸ்பிரேசனாக வைத்து எழுதியது போல் இருக்கும். மம்முட்டி அதைத் துப்பறிவார். நான் பார்த்த டிடெக்டிவ் படங்களில் பெஸ்ட் அது தான்.

2. கிரிமினல் கதைகள்:
இதில் ஹீரோ தான் குற்றவாளி. ஒரு குற்றத்தைச் செய்துவிடுவான் அல்லது செய்யத் திட்டமிடுவான். போலீஸிடம் சிக்காமல் தப்பினானா இல்லையா என்றே கதை நகரும். சமீபத்திய நல்ல உதாரணம், பாபநாசம் (த்ரிஷ்யம்).

இங்கே குற்றம் என்பது பழிவாங்கலாகவோ அல்லது தற்செயலானதாகவோ இருக்கும். விடியும் முன் படமும் இந்த வகையில் வந்த நல்ல (சுட்ட) படம்.
குற்றம் என்பது திருட்டாகவும் இருக்கலாம், மங்காத்தா மாதிரி. திருடா திருடா இன்னொரு உதாரணம். இந்தக் கதைகளின் முடிவு, பெரும்பாலும் பணம் யாருக்கும் இல்லாமல் வீணாகிவிட்டது என்றே வரும்!

ஹீரோவை ஒரு போலீஸ் கேரக்டர் துரத்திக்கொண்டு வரும். திருடன் – போலீஸ் கண்ணாமூச்சி ஆட்டம் தான் இங்கே கதைக்களம். இதை நன்றாக அமைப்பவர், ஷங்கர் தான். ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன் போன்ற படங்களில் ஹீரோவை போலீஸ் நெருங்குவதை நன்றாக வடிவமைத்திருப்பார். இதே ஃபார்மேட்டில் வந்த ரமணாவில் யூகிசேது கேரக்டரை புதுமையாக வடிவமைத்திருந்தார்கள்.

ஹீரோ பிடிபட்டுவிடுவானோ எனும் பதைபதைப்பில் ஆடியன்ஸை வைக்க வேண்டியது தான் இவ்வகைக் கதைகளில் முக்கியம். அதற்கு ஹீரோவுடன் ஆடியன்ஸ் ஒன்றும்படி, முன்கதையை அமைத்திருக்க வேண்டும். செண்டிமெண்ட்டான காரணம் இருந்தால், உத்தமம்!

பாபநாசம், விடியும் முன் போன்ற படங்களில் தற்செயலாக நடந்த கொலையால் அப்பாவிகள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று காட்டியிருப்பார்கள். அது ஆடியன்ஸை எளிதில் கதையுடன் ஒன்ற வைக்கும். (விடியும் முன் படத்தின் முன்கதை செண்டிமெண்ட்டலாக சுமார் தான். கொஞ்சம் நமக்குப் புதிய சூழல் அது!)

இதில் முக்கியமான விஷயம், ஹீரோவால் கொல்லப்படுபவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருக்க வேண்டும். ஆடியன்ஸ் ஒரு துளிகூட அவர்களை ரசிக்கக்கூடாது. இவரும் நல்லவர், ஹீரோவும் நல்லவர் என்று போனால் பெரும் சிக்கல் வரும். அதைத் தீர்க்க, திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் உழைப்பைக் கொட்ட வேண்டும், பொம்மலாட்டம் மாதிரி!

போலீஸ் மட்டுமல்லாது, வில்லன் குரூப்பும் ஹீரோவைத் துரத்துவதாக திரைக்கதையை அமைப்பது பரபரப்பைக் கூட்டும்.

3. பாதிக்கப்பட்டோர் கதைகள்:
இதில் ஹீரோ போலீஸோ, குற்றவாளியோ அல்ல. அந்த சம்பவத்தில் தற்செயலாக சிக்கிக்கொண்ட அப்பாவி. மௌனகுரு, கலைஞன், புரியாதபுதிர் போன்ற படங்கள் இந்த கேட்டகிரியில் வரும். ஹீரோ வில்லன் கும்பலால் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டவராகவும் இருக்கலாம்.
’ஒரு சாமானியன் மேல் விழும் பழி. அவனைத் துரத்தும் போலீஸ். பின்தொடரும் வில்லன்கள்’ என்பது ஹிட்ச்காக்கில் ஆக்சன் ஜெனர் கதை டெம்ப்ளேட் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதுவும் அந்த வகை தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட குற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு, ஹீரோயிசத்துக்குள் போகாமல் கதை சொல்வது தான் வித்தியாசம்.
ஒரு வில்லன் திட்டமிட்டு, ஹீரோவை துல்லியமாக சிக்க வைக்கும் கதைகளும் இதில் வரும். அதிகார வர்க்கம் எந்த அளவிற்கு சாமானியர்களை இரக்கமின்றி நடத்தும் என்பதையும் இவ்வகைக் கதைகளில் துல்லியமாகக் காட்ட முடியும்.


கதை சொல்லும் முறையைப் பொறுத்து, க்ரைம் ஜெனரை இரண்டாகப் பிரிக்கலாம். ஹிட்ச்காக் சொன்ன சஸ்பென்ஸ் மற்றும் சர்ப்ரைஸ் தான் அவை.

சஸ்பென்ஸ்:
குற்றம் செய்தது யார் என்று ஆடியன்ஸூக்குக் காட்டப்பட்டுவிடும். அதன்பின் அவர்கள் பிடிபடுகிறார்களா, இல்லையா எனும் தவிப்பில் ஆடியன்ஸை வைப்பது இவ்வகைக் கதைகள். குற்றம் நடந்த விதம், அதற்கான காரணம், தடயங்கள் எல்லாமே ஆடியன்ஸூக்குத் தெரியும். போலீஸ் ஒவ்வொன்றாக நெருங்கும்போது, சுவாரஸ்யம் கூடும். சஸ்பென்ஸ் உத்தியால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சர்ப்ரைஸ்:
குற்றத்தைச் செய்தது யார் என்று கிளைமாக்ஸ் அல்லது முக்கால்வாசிப் படம் வரை தெரியாது. புதிர் போன்று திரைக்கதை நகரும். ஆடியன்ஸ் குற்றவாளி யார் என்று யூகித்துக்கொண்டே இருப்பார்கள். இவர் தான் என்பது போல் காட்சிகள் அமைத்து, இவர் இல்லை என்று செம ட்விஸ்ட் வைப்பார்கள்.

1967ல் வந்த அதே கண்கள் திரைப்படம், இன்றளவும் போற்றப்படும் க்ரைம் மிஸ்டரி த்ரில்லராக உள்ளது. கிளைமாக்ஸ்வரை வில்லன்/கொலையாளி யார் என்று தெரியாமல் ஹீரோவும் ஆடியன்ஸும்(!) துப்பறிய வைத்திருப்பார்கள். அதே கண்கள் போன்ற மற்றொரு நல்ல மிஸ்ட்ரி ஃபிலிம், நடு இரவில்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்று ஒரு நல்ல சர்ப்ரைஸ் மூவி உண்டு. அதில் ஹீரோ நடிகரை வில்லனாகவும், வில்லன் நடிகர்களை ஹீரோவாகவும் வைத்து செம ட்விஸ்ட் கொடுத்திருப்பார்கள். நடிகர்களின் தனிப்பட்ட இமேஜ் உதவியுடன் திரைக்கதையில் விளையாடியிருப்பார்கள். இந்த நடிகர் என்றால் வில்லன் தான் எனும் நம் வீக்கான மைண்ட் செட் தான், படத்திற்கு பெரும் பலம்!

சமீப காலத்தில்(?) வந்த படங்களில் முக்கியமானது, புரியாத புதிர்.
துப்பறியும் நாவல் படிப்பது போன்ற அனுபவத்தைக் கொடுப்பது, இந்த சர்ப்ரைஸ் வகை. ’இதை யார் செய்தது? (Whodunnit)’ கதைகள் என்று இந்தவகை மர்மக் கதைகள் அழைக்கப்படுகின்றன.

இப்போதெல்லாம் ஆடியன்ஸ் மிகவும் தெளிவாகிவிட்டதால், சஸ்பென்ஸ் படமாகக் கொண்டுசென்று, இறுதியில் சர்ப்ரைஸாகவும் மாற்றலாம். உதாரணம், மங்காத்தா.



க்ரைம் ஜெனர் தனித்து வருவதோடு, ஆக்சன் மற்றும் ஃபிலும் நுஆர் உடன் இணைந்தும் வரும். பெரும்பாலான ஃபிலிம் நுஆர் கதைகள், குற்றத்தை மையப்படுத்தி நகர்பவை என்பதால் க்ரைம் ஜெனருடன் நுஆரும் இணைந்தே வரும். உதாரணம், அந்த நாள்.


க்ரைம்/மிஸ்ட்ரி ஜெனர் எழுதும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் சில:

·     ஒரு கொலை..அதற்கு ஒரு விசாரணை என்பது தான் கதைக்களம். ஆனாலும், அந்தக் கொலை இல்லாவிட்டால்கூட கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். வலுவான, வித்தியாசமான கேரக்டர்கள் இருக்க வேண்டும். உதாரணம், புரியாத புதிர். அப்போது ரகுவர் பேசிய ‘I Know’ வசனம் மிகப்பிரபலம். தியேட்டருக்கு பலரையும் அது ஈர்த்தது.

·  நடக்கின்ற குற்றம்கூட சுவார்ஸ்யமாக, புதுமையாக இருக்க வேண்டும். குற்றத்தில் என்னய்யா புதுமை என்கிறீர்களா? வேட்டையாடு விளையாடு சைக்கோ, பாபநாசம் – ஃபேமிலி டிராமாவை த்ரில்லர் ஆக்கும் எதிர்பாராத கொலை, புலன்விசாரணையில் கிட்னி திருட்டு போன்றவை இதற்கு உதாரணம்.

·         குற்றம், புதுமையாக மட்டுமல்லாது நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டு என்று ஆடியன்ஸ் நம்ப வேண்டும். குற்றத்தை நம்பவில்லையென்றால், பின்னர் நடக்கும் துப்பறிதலில் கொஞ்சமும் ஆர்வம் வராது.

·         டிடெக்டிவ் ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால், குற்றவாளியை நெருங்க வேண்டும். 

·         குற்றவாளி, குற்றம் செய்யுமளவுக்கு பலசாலியாக/முக்கிய கேரக்டராக இருக்க வேண்டும். ஒரு சப்பை கேரக்டரைக் காட்டி, இவர் தான் என்று சொன்னால் ஃப்ளாப் தான்.

·         ஆடியன்ஸ், டிடெக்டிவ்வின் பாயிண்ட் ஆஃப் வியூவிலேயே படத்தைப் பார்க்க வேண்டும். டிடெக்டிவிற்கு கிடைக்கும் எல்லா க்ளூக்களும், ஆடியன்ஸுக்கும் தெரிய வேண்டும். டிடெக்டிவ் போன்றே ஆடியன்ஸும் கிளைமாக்ஸ்வரை யோசிக்க வேண்டும்.

·         க்ரைம் கதைகளில் பாதிக்கப்படும் கேரக்டர்கள் பற்றி ஆடியன்ஸ் கவலைப்பட வேண்டும். அத்தகைய எம்பதி கேரக்டர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

·         கிளைமாக்ஸ், லாஜிக்குடனும் நம்பக்கூடியதாகவும், சர்ப்ரைஸ் படமென்றால்’ இதை யோசிக்கலியே’ என்று நினைக்க வைப்பதாகவும் இருப்பது அவசியம். இத்தகைய படங்களுக்கு கிளைமாக்ஸ் தான் மிகமிக முக்கியம்.

·         மர்மக்கதைகளில் குற்றவாளி கேரக்டர் சீக்கிரமே வந்துவிடவேண்டும். ஆனாலும் ஆடியன்ஸ் யூகிக்கக்கூடாது. திடீரென பாதிப்படத்திற்கு மேல் ஒரு கேரக்டரை நுழைத்து, அவர் தான் என்றால் சுவாரஸ்யமாக இருக்காது.

·         மர்மக்கதைகளில் உள்ள பெரிய ரிஸ்க், கிளைமாக்ஸ்வரை நாம் ஆடியன்ஸை முட்டாள் ஆக்குகிறோம் என்பது தான். அதை ஆடியன்ஸ் ரசிக்கும்படி செய்வது தான் சவால். என்னைப் பொறுத்தவரை, இருப்பதிலேயே ரிஸ்க்கான ஜெனர் இது. மிகத்தெளிவான திட்டமிடலுடன், ஆடியன்ஸ் யூகித்துவிடாதபடி, ஆனாலும் யூகிப்பதற்கான தடயங்களுடன் திரைக்கதையை அமைக்க வேண்டும்




இதுவரை, த்ரில்லர் கதைகள் பற்றிப் பார்த்துவந்தோம். ஓரளவு எல்லா த்ரில்லர் ஜெனர்கள் பற்றிப் பார்த்துவிட்டோம். விடுபட்டவை, ஆக்சன் – க்ரைம், ரொமாண்டிக் த்ரில்லர், நுஆர்-க்ரைம் போன்று கலப்பின படங்களாக இருக்கும்.

அடுத்து, காதல், காமெடி போன்ற மெலோ டிராமா கதைகள் பற்றிப் பார்ப்போம்.

ஒரு மாத லீவில் ஊருக்குச் செல்வதால், வந்தபின் தொடர்கிறேன். தாமதத்திற்கு பொறுத்தருள்க.

(மீண்டும் சந்திப்போம்)


மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 53"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 14, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 52


ஜெனர் – அறிவியல் புனைவுகள் (Science Fiction)

அறிவியல் தொழில்நுட்பத்தின் காரணமாக, ஒரு கேரக்டர் அல்லது சமூகத்தின் மீது ஏற்படும் மாற்றத்தைப் பற்றியும், அந்த மாற்றம் தன் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பேசுபவையே சைன்ஸ் ஃபிக்சன் எனப்படும் அறிவியல் புனைவுகள் ஆகும்.

ஃபேண்டஸி போன்றே சைன்ஸ் ஃபிக்சன் படங்களும் தமிழில் வெகுஅரிதாகவே வந்திருக்கின்றன. அறிவியல் ஆராய்ச்சிகள் பற்றிய செய்திகளை ஏ செண்டர் ஆடியன்ஸே கண்டுகொள்ளாத சமூகம் நம்முடையது. எனவே அறிவியல் புனைவுகள் கொஞ்சம் அந்நியத்தன்மையை நமக்கு கொடுக்கவே செய்கின்றன. சமீபகாலத்தில் கமர்சியலாகவும் அறிவியல் புனைவுகள் வெற்றியடைய ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம்.


அறிவியல் புனைவுகள் படங்களைப் பற்றிப் பேசும்போது, நாம் பெருமைப்படகூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. இந்தியாவின் முதல் சைன்ஸ் ஃபிக்சன் படம், தமிழில் தான் எடுக்கப்பட்டது. காடு(1952) எனும் அந்தத் திரைப்படம், மாடர்ன் ஃபிக்சர்ஸுடன் இணைந்து வில்லியம் பெர்க் எனும் ஹாலிவுட் இயக்குநர் தயாரித்து இயக்கிய படம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஜி.ராமநாதனின் இசையில் உருவானது காடு. நம்பியார் அதில் நடித்திருந்தார்.

அடுத்து, இந்தியாவின் முதல் வேற்றுகிரகவாசி (Alien) படம், கலையரசி(1963). எம்.ஜி.ஆர், பானுமதி, நம்பியார் நடிப்பில் வெளியானது கலையரசி.

1967ஆம் ஆண்டு, பெருமைக்குரிய வங்காள இயக்குநர் சத்யஜித் ரே ‘Alien’ எனும் படத்தினை இயக்க ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் கைவிடப்பட்டது. 1982ல் ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல் பெர்க் E.T. எனும் ஆங்கிலப்படத்தினை வெளியிட்டபோது, தனது திரைக்கதையை காப்பி அடித்து, E.T. எடுக்கப்பட்டதாக சத்யஜித் ரே நேரடியாகவே குற்றம் சாட்டினார். ஏனென்றால் Alien படம், ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டது. அங்கேயிருந்தே தன் திரைக்கதை, ஸ்பீல் பெர்க் கையில் கிடைத்திருக்க வேண்டும் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

ஆனாலும் நமது இணையப் போராளிகளின் கொள்கையான ‘வெள்ளையா இருக்கிறவன் காப்பி அடிக்க மாட்டான்’ என்பதன்படி, சதயஜித் ரேயின் குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாமல், நிராகரிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் சைன்ஸ் ஃபிக்சன் மற்றும் ஏலியன் கதைகள் தமிழில் தான் உருவாக்கப்பட்டன என்றாலும், இதுவரை 13 அறிவியல் புனைவுப் படங்களே வந்திருக்கின்றன. காரணம், அதன் அந்நியத்தன்மை கொடுத்த தோல்வி தான்.

அந்தப் படங்களைப் பற்றியும் அறிவியல் புனைவுகளின் வகைகளையும் இப்போது பார்ப்போம்.

ராட்சச (Monster) கதைகள்:

திகில் படங்கள் பார்க்கும்போதே இதையும் சற்றுப் பார்த்தோம். திகில் படங்களில் பேய் என்றால், சைன்ஸ் ஃபிக்சன் படங்களில் ராட்சச இயல்புள்ள வில்லன்கள்.

சமூகத்திற்கு இந்த வில்லனால் கெடுதல் நேரும்போது, ஹீரோ வந்து காப்பாற்றும் ஆக்சன் கதைகள் இவை. எனவே இவை ஹாரர் ஜெனரில் சேராமல், சைன்ஸ் ஃபிக்சன் - ஆக்சன் ஜெனரில் தான் வரும்.

காடு(1952) படத்தில் வரும் காட்டில் மிருகங்கள் விநோதமாக செயல்படுகின்றன, சத்தங்களை எழுப்புகின்றன. அது அருகே இருக்கும் கிராமத்து மனிதர்களுக்கு பயத்தை உண்டாக்குகிறது. காட்டில் என்ன தான் பிரச்சினை என்று கண்டுபிடிக்க, மூன்று டூரிஸ்ட்கள் (ஹாலிவுட் நடிகர்கள்) முயற்சிக்கிறார்கள். முடிவில், பனியுகத்தில் வாழ்ந்த ராட்சச யானைகள் (Wooly Mammoths) அந்தக் காட்டிற்குள் ஊடுருவியிருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

படம் முழுக்க பில்டப் ஏற்றிவிட்டு, கிளைமாக்ஸில் நம்மூர் யானைக்கு கொஞ்சம் மேக்கப் போட்டு இது தான் மம்மூத் என்று ஏமாற்றினார்கள். படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் பற்றி, விவரம் இல்லை!
1963ல் அடுத்து மான்ஸ்டர் மூவியாக கலையரசி வந்தது. இதில் மான்ஸ்டர், வேற்றுகிரகவாசி. அந்த வேடத்தில் வந்தது நம்பியார். படத்தின் கதையில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.

வேற்றுகிரகத்தில் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. ஆனால் கலைகளில் மட்டும் மக்கள் தேர்ச்சிபெறவில்லை. எனவே பூமியில் இருந்து கலைகளில் சிறந்த நாயகியை (பானுமதி)க் கடத்திச் செல்ல, ஏலியன் நம்பியார் வருகிறார். அந்த ஏலியனுடன் போரிட்டு ஹீரோ எம்.ஜி.ஆர் காப்பாற்றுகிறார்.

இந்தக் கதையைப் படித்ததும் உங்களுக்கு செல்வராகவனின் இரண்டாம் உலகம் ஞாபகம் வந்தால், அடியேன் பொறுப்பல்ல. தொடர்ந்து செல்வாவின் டவுசரை அவிழ்ப்பதில் எனக்கும் சந்தோசமில்லை. ஏனென்றால், எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் அவர்.

கலையரசி படமும் பெரிய வரவேற்பினைப் பெறவில்லை. விஷுவலாக மிரட்டாதது ஒரு காரணம். இன்னொரு காரணம், இந்தக் கதை நமது பழைய ராஜா ராணி கதையின் சாயலில் இருந்தது தான். ஒரு நாட்டு இளவரசியை அண்டைநாட்டு மன்னன் கடத்த முனைவதும், அதை ஹீரோ (பெரும்பாலும் தளபதி) போரிட்டுத் தடுப்பதும் பல கதைகளில் வந்த விஷயம் தான். ஏலியனின் அந்நியத்தன்மையும் இதில் சேர, படம் சோபிக்கவில்லை.

இந்த சைன்ஸ் ஃபிக்சன் சமாச்சாரம் எல்லாம் நமக்கு ஒத்துவராது எனும்  தெளிவு பிறந்ததால், அதன்பின் யாரும் அத்தகைய கதைகளில் இறங்கத்துணியவில்லை. அதன்பிறகு 26 வருடங்களுப்பிறகு வந்தது, நாளைய மனிதன் (1989). தமிழில் முதன்முறையாக சூப்பர் ஹிட் ஆன, சைன்ஸ் ஃபிக்சன் மூவி.

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கிறார் ஒரு டாக்டர். அதை ஒரு பிணத்திற்குச் செலுத்தி டெஸ்ட் பண்ணும்போது, சாகாவரம் பெற்ற மான்ஸ்டராக அந்தப் பிணம் உருவெடுக்கிறது. அஜய் ரத்தினம் நாளைய மனிதனாக நடித்துக் கலக்கியிருந்தார். ஹிரோவாக பிரபு.

அந்தப் படம் தந்த வெற்றியில், அதன் இரண்டாம்பாகமான அதிசய மனிதன் 1990 வெளியானது.

அதில் இருந்து 20 வருடங்கள் கழித்து உருவான மான்ஸ்டர் மூவி, ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்(2010).

ஒரு விஞ்சானி தான் கண்டுபிடித்த ரோபோவிற்கு உணர்வூட்டும்போது, அது மான்ஸ்டர் ஆகி, அவரது காதலியைவே லபக்குகிறது எனும் சுவாரஸ்யமான கதையுடன் வெளியானது எந்திரன். தமிழில் அதிக பொருட்செலவில் உருவாகி, பெரும்வெற்றி பெற்றது.

அடுத்து 2012ல் அம்புலி வந்தது. 150 வருடங்களுக்கு மேல் மனிதர்களை வாழவைக்கும் மருந்தைக் கண்டுபிடித்த ஒரு விஞ்சானி, அதை ஒரு பெண்ணின் கருவிற்குச் செலுத்துகிறார். அந்தக் குழந்தை ஒரு மான்ஸ்டராகப் பிறக்கிறது. இதில் அம்புலி எனப்படும் மான்ஸ்டரால் ஏற்படும் அழிவுகளைவிட, அம்புலி யார் எனும் துப்பறிதலே திரைக்கதையில் முக்கியப் பங்கு வகித்தது. அந்தவகையில் இப்படம், சைன்ஸ் பிக்சன் – மிஸ்ட்ரி ஜெனரில் சேரும்.

இந்தவகையில் கடைசியாக வந்த படம், அப்புச்சி கிராமம். விண்கல் ஒன்று தான் இங்கே மான்ஸ்டர். ஆனாலும் விண்கல் கிராமத்தைத் தாக்க வருவதால் அல்லது தாக்குவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பேசாமல், இரு காதல் ஜோடிகளின் கதையில் அதிக கவனம் செலுத்தியதால் படம் படுதோல்வி அடைந்தது.

இந்த வகையில் வில்லன் என்பது வேற்றுகிரகத்தில் இருந்து வருவதாகவோ அல்லது ஒரு விஞ்சானியின் டெக்னிகல் மிஸ்டேக்(!!) ஆகவோ தான் இருக்கும்.
 
நல்ல ‘ராட்சச’ கதைகள்:

இவ்வகைப் படங்களில் ஹீரோவுக்கு, அறிவியல் ஆராய்ச்சியின் பலனாக ஒரு புதிய சக்தி கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு ஹீரோ என்ன செய்கிறான் என்பதே கதை.

இதை வைத்து அட்வென்ச்சர் கதை சொல்லலாம் என்றாலும், இதுவரை தமிழில் காமெடிக் கதைகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. அதுவும் இரண்டே படங்கள்!

இவ்வகையில் வந்த முதல் படம், எஸ்.ஜே. சூர்யா கொடுத்த நியூ(2004). தமிழில் முதலில் வந்த, முழுமையான செக்ஸுவல் காமெடி மூவி என்றும் சொல்லலாம்.

சிறுவனை இளைஞன் ஆக்கும் மருந்தைக் கண்டுபிடித்த ஒரு விஞ்சானி, அதை ஹீரோவிடம் செலுத்தி சோதித்துப் பார்க்கிறார்.  அதனால் உடலளவில் இளைஞனாகவும், மனதளவில் குழந்தையாகவும் ஹீரோ படும் அவஸ்தைகளே கதை. விஞ்சானியின் ‘டெக்னிகல் மிஸ்டேக்’ கேட்டகிரி கதை தான்.

கலாச்சாரத்தில் மேன்மை பெற்ற(!) நம் நாடு, பயந்து போய் கொடுத்த சென்சார் சர்டிஃபிகேட்டைத் திரும்ப வாங்கிக்கொள்ளும் அளவிற்கு எஸ்.ஜே.சூர்யா இறங்கி அடித்த படம். எப்போதாவது இந்த நாட்டு மக்களுக்கு அறிவு வளர்ந்துவிட்டதாக அரசு நம்பினால், மீண்டும் படத்திற்கு சென்சார் சர்டிஃபிகேட் கொடுக்கலாம்.

அடுத்து, இந்த வகையில் வந்த படம் இன்று நேற்று நாளை (2015). தமிழில் டைம் டிராவலை வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.

2065ல் ஒரு விஞ்சானி டைம் டிராவல் மெசினை கண்டுபிடிக்கிறார். அதைச் சோதிக்க 2015க்கு அதை அனுப்புகிறார். அது ஹீரோ கையில் கிடைக்க, அதை வைத்து ஹீரோ செய்யும் செயல்களே கதை.

இதுவும் காமெடியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது.

Fight For Technology:


விஞ்சானி(கள்), ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். பெரும்பாலும் நவீன ஆயுதங்கள். அது வில்லன் கோஷ்டியின் கையில் சிக்கிவிட, ஹீரோ மீட்டெடுக்கும் அட்வென்ச்சர் கதைகள் இவ்வகையில் வரும்.

இதில் மான்ஸ்டர் கேரக்டர் கிடையாது. அழிவை உண்டாக்கும் அந்த ஆயுதம் தான் மான்ஸ்டர்.

இந்த வகையில் வந்த முதல் திரைப்படம், விக்ரம் (1983).

ஏன் இந்தப் படம் ஓடவில்லை என்று இன்று பலராலும் கேட்கப்படும் படம். ஜேம்ஸ்பாண்ட் டைப் ஹீரோவாக, கமலஹாசன் நடித்து வெளிவந்த படம்.

ஒரு ஏவுகணையை வில்லன் கும்பல் கடத்திவிட, அதை ஹீரோ மீட்பதே கதை. அன்றைக்கு இருந்த சினிமா டெக்னாலஜியை வைத்து, முடிந்தவரை சிறப்பாக படத்தைக் கொடுத்திருந்தார் கமல்.

அதன்பிறகு 2008ல் தசாவதாரம் எனும் அடுத்த சைன்ஸ்ஃபிக்சன் படத்துடன் வந்தார் கமல். சைன்ஸ் ஃபிக்சனுடன் பட்டர்ஃப்ளை எஃபக்ட், பத்து வேடங்கள் என கலந்துகட்டி அடித்திருந்தார்.

ஒரு அழிவை உண்டாக்கும் வைரஸ் ஒன்று வில்லன்களிடம் சிக்கிவிடாமல் தடுக்க, ஹீரோ மேற்கொள்ளும் அட்வென்ச்சரே கதை.

 ஒரு அழிவு ஆயுதம் – அதன்மேல் வில்லன்களுக்கு கண் – ஹீரோவின் சாகசம் என்பதே இவ்வகைப் படங்களின் அடிநாதம்.


இந்த உலகத்தைக் காப்பது நம் கடமை எனும் மனநோய் வெள்ளைக்காரர்களுக்கு உண்டு. எனவே ஹாலிவுட்டில் சைன்ஸ் ஃபிக்சன் என்றால், உலகத்திற்கே அழிவு வந்துவிட்டதாகவும் உலகத்தை அவர்களே காப்பதாகவும் கதை சொல்வது அங்கே வழக்கம்.

பொதுவாக அறிவியலைவிட மனித நேயமே முக்கியம் என்ற கருத்தை சைன்ஸ் ஃபிக்சன் படங்கள் முன்வைக்கும்.

ஃபேண்டஸி போன்றே சைன்ஸ் ஃபிக்சனும் மற்ற ஜெனருடன் இணைந்தே வரும். வில்லன் அல்லது பிரச்சினைக்கு காரணம், அறிவியலாக இருக்கும். அதன்பின் அது ஆக்சனாகவோ, அட்வென்ச்சராகவோ, காமெடியாகவோ ஆகலாம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 52"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, July 13, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 51


ஜெனர் – மாயக் கதைகள் (Fantasy)

மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை உலகிற்கு அளித்த நமக்கு, ஃபேண்டஸி என்பது புதிய விஷயம் அல்ல. இந்தியாவில் பிறக்கும் எல்லோருமே, ஏதோவொரு ஃபேண்டஸிக் கதையைக் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம்; குறைந்த பட்சம் பாட்டி வடை சுட்ட கதையைக் கேட்டு!

மாயக் கதைகளுக்கான வரையறை என்ன?

இந்த உலகத்தில் உள்ள விதிகளுக்கு அப்பாற்பட்டு, தனக்கென்று சில விதிகளை வரையறுத்துக்கொண்ட ஒரு மாய & கற்பனை உலகில் நடக்கும் கதைகளே மாயக்கதைகள் என்று வரையறுக்கலாம். அந்த கற்பனை உலகானது, இந்த புவியுடன் ஒத்தே இருக்கும்; சில விஷயங்களைத் தவிர்த்து.


பாட்டி வடை சுட்ட கதையை எடுத்துக்கொண்டால், காக்கா வடையைத் தூக்குவதோ அல்லது பாட்டி வடைசுடுவதோ மாயை அல்ல. இது இவ்வுலகிற்கும் ஏற்ற இயல்பான விஷயங்கள் தான். ஆனால் காக்காவும் நரியும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கும்போது, அது ஃபேண்டஸி ஆகிவிடுகிறது.

’மிருகங்கள் பேசுமா?, பறவைகள் நேயர் விருப்பத்திற்கு இணங்க பாடுமா?’ எனும் லாஜிக்கல் கேள்வியையும் தாண்டி, அவற்றை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வதே ஃபேண்டஸியில் முக்கியம்.

இன்னொரு விஷயம், இந்த மாயை என்பது அறிவியல் டெக்னாலஜிக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக, எதிர்காலத்தை அறிந்துகொள்ளுதல் என்பதை ‘இன்று நேற்று நாளை’ போன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நடப்பதாகக் காட்டினால், அது அறிவியல் புனைவு (சைன்ஸ் ஃபிக்சன்). அதே நேரத்தில் ஜோசியம் மூலமாகவோ, முனிவர் மூலமாகவோ எதிர்காலத்தை அறிவதாகக் காட்டினால், அது ஃபேண்டஸி. இதற்கு உதாரணம், மான் கராத்தே.

அமெரிக்கா அளவிற்கு நாம் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துபவர்கள் அல்ல. ஸ்ரீஹரிகோட்டா சேட்டிலைட்டைவிட ஸ்ரீதிவ்யா வீடியோக்களே நம் மக்களுக்கு முக்கியமானவையாக இருப்பதால், அறிவியல் புனைவுகள் நமக்கு இன்னும் ரிஸ்க்கான விஷயமாகவே இருக்கின்றன. அதே போன்றே, இது பகுத்தறிவு மண் என்பதால், ஃபேண்டஸிக் கதைகளைச் சொல்லி, மக்களை நம்ப வைப்பதும் கடினமான காரியமாக இருக்கிறது. ‘காதுல பூ சுத்துறாங்கய்யா’ என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஃபேண்டஸி என்பதே சுவாரஸ்யமாக, காதில் பூச்சுற்றுவது தான் என்பதே இன்னும் பலருக்குப் புரிவதில்லை.

இத்தகைய காரணங்களினாலும், தயாரிப்புச் செலவு அதிகம் என்பதாலும் ஃபேண்டஸிக் கதைகள் சமீபகாலமாக மிகவும் குறைந்துவிட்டன. இதுவரை வந்த படங்களை வைத்து, ஃபேண்டன்ஸிக் கதைகளை இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம்.

காவியக் கதைகள்:

நமது புராண, இதிகாசங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்தாளும் கதைகள். கர்ணன், சம்பூர்ண ராமாயணம், விக்கிரமாதித்யன் போன்றவை சில உதாரணங்கள். புராணங்கள், வரலாற்றுக்கதைகள் தான் என்றாலும், அதில் இருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களினால் அவை மாயக்கதைகள் ஆகின்றன.

நாம் முன்பே வில்லுப்பாட்டு பற்றிப் பார்த்தபடி, ஒரு குறிப்பிட்ட கேரக்டரை மட்டும் ஹீரோவாக எடுத்துக்கொண்டு கதை சொல்வது மரபு. பெரும்பாலும் முக்கியக் கேரக்டர்கள் பற்றி ஏற்கனவே படங்கள் வந்தாகிவிட்டன. இருந்தாலும் சிகண்டி கதை, அகலிகை கதை போன்றவற்றை மையமாக வைத்து நல்ல சினிமாக்களைக் கொடுக்க முடியும்.

கற்பனைக் கதைகள்:

நிகழ்காலத்தில், நிகழ்கால கேரக்டர்களைக் கொண்டே ஒரு மாயக்கதையைச் சொல்வது இந்த வகையில் வரும். மறுஜென்மம், ஜோதிடம்/எதிர்காலத்தை அறிதல் போன்ற தீம்களை வைத்து இதில் விளையாடலாம்.

இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை இதற்குச் சிறந்த உதாரணம். அந்தக் கதையின் இன்ஸ்பிரேசனில் சமீபத்தில் அனேகன் வந்ததையும் அறிவீர்கள்.

 ராஜமௌலியின் மகதீரா, நான் ஈ ஆகிய இருபடங்களுமே மறுஜென்மத்தை மையமாகக் கொண்ட ஃபேண்டஸிக் கதைகள். ’இறந்த ஒரு மனிதன், ஈயாக மறுஜென்மம் எடுத்து வந்து பழிவாங்கினால்?’ எனும் ஒன்லைன் இந்தியாவையே கலக்கியதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு முனிவர் மூலம் எதிர்காலத்தை அறிந்துகொண்ட ஒரு நண்பர்கள் குழுவின் நடவடிக்கைகளை மையமாக வைத்து, மான் கராத்தே வந்தது.

பொதுவாக எல்லா ஜெனருமே ‘இப்படி இருந்தால் (What if)’ எனும் கேள்வியையே கருவாகக் கொண்டவை தான். ’ஒரு கோழை, போலீஸ் ஆனால்..’, அது அவசர போலீஸ் 101 ஆகவோ அல்லது வேட்டையாகவோ ஆகும். ஃபேண்டஸிப் படங்களுக்கு அடிப்படை விஷயமே ‘இப்படி இருந்தால் (WHAT IF..) எனும் சிந்தனை தான்.

இறந்த காதல் ஜோடிக்கு முன் ஜென்ம நினைவு வந்தால்…

ஒரு ஈ பழிவாங்கக்கிளம்பினால்…

ஒருவனுக்கு மனிதர்கள்(அல்லது லேடீஸ் மட்டும்) மனதுக்குள் பேசுவது கேட்கத் துவங்கினால்..

பேய்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தால்..

ஒரு மனிதனின் கனவுக்குள் இன்னொரு மனிதன் நுழைய ஆரம்பித்தால்..

இன்னொரு உலகம் இருந்து, அவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டால்…(இரண்டாம் உலகம் போன்று, டெக்னாலஜிக்குள் போகாமல்!)

பாண்டியர்-சோழர் இப்போதும் தப்பியிருந்து, அந்தப் பகை தொடர்ந்தால்..

இவ்வாறு நடைமுறைச் சாத்தியமற்ற, ஆனால் நம் (மூட) நம்பிக்கைகளின் துணைகொண்டு நம்மைக் கவரும் ஆற்றல் கொண்டவை ஃபேண்டஸிக் கதைகள்.

திரைக்கதையைப் பொறுத்தவரை, ஃபேண்டஸி என்பதை தனி ஜெனராகக் கொள்ளமுடியாது என்பதே யதார்த்தம். மாயையான ஒரு விஷயம், அதனால் உருவான அல்லது பாதிக்கப்பட்ட கேரக்டர்கள் என்பதே ஃபேண்டஸி கொடுக்கும் புதிய விஷயம். இத்துடன் மற்ற ஜெனர் சேரும்போது கீழ்க்கண்ட ஜெனர்கள் உருவாகின்றன.
அவை

ஃபேண்டஸி-ஆக்சன்
ஃபேண்டஸி-அட்வென்ச்சர்
ஃபேண்டஸி-காமெடி
ஃபேண்டஸி-லவ்
ஃபேண்டஸி-ஹிஸ்டோரிக்கல் – என்று இணைந்தே வரும்.

எனவே நாம் இதுவரை பார்த்த ஜெனர் அம்சங்களையும், இந்த மாயக்கதைகளின் அம்சங்களுடன் இணைத்தே திரைக்கதைகள் உருவாக்கப்பட வேண்டும். இதில் கோட்டை விடுவதால்தான் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற நல்ல ஃபேண்டஸி தீம்கள் கொண்ட படங்கள்கூட, தோல்வி அடைகின்றன.

நான் ஈ படம் ஒரு ஃபேண்டஸி ஆக்சன் வகை.

ஹீரோ வில்லனிடம் இருந்து  ஹீரோயினைக் காப்பாற்றுகிறான். இது தான் அதில் இருக்கும் ஆக்சன் ஒன்லைன்.

ஹீரோ என்பவன் மனிதன் அல்ல..ஈ…மறுஜென்மம் எனும் ஃபேண்டஸிக்கரு கொடுத்த ஃபேண்டஸி ஹீரோ. இதுவும், இந்த ஃபேண்டஸி உருவாக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும் தான் அந்த ஆக்சன் ஒன்லைனில் கூடுதலாகச் சேர்ந்த அம்சங்கள்.

படத்திற்கு அடிநாதமாக காதல் ஓடுகிறது. ஆனால் அது காதல் கதை அல்ல. அத்தகைய மெலொடிராமா விதிகள் எதுவும் இங்கே பின்பற்றப்படவில்லை. ஏழை, சாமானியன், மாற்றுத்திறனாளி போன்றே வில்லனை விட தகுதிக்குறைவான ஹீரோ, ஈ. ஒரு பெர்ஃபெக்ட் ஆக்சன் ஹீரோ. படத்தில் ஃபேண்டஸி சம்பவங்கள் என்ன நடந்தாலும், ஆக்சன் மூவி எனும் ஜெனரைவிட்டு எதுவும் விலகுவதில்லை.


இப்போது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை எடுத்துக்கொள்வோம்.

ஒரு சாமானிய ஹீரோ (கார்த்தி), ஒரு சாகசப்பயணத்தில் வலிய இழுத்துவிடப்படுகிறான்….ஆக்சனும் அட்வென்ச்சரும் கலந்த ஜெனர்..

பாண்டிய வம்சத்து வழித்தோன்றல்(ரீமாசென்), இன்னும் எஞ்சியிருக்கும் சோழ வம்சத்தை அழிக்கக் கிளம்புகிறாள்..ஒரு பழி வாங்கும் ஃபேண்டஸி ஆக்சன் கதை.

சோழரும் பாண்டியரும் தமிழரின் வரலாற்றுப் பெருமிதங்கள். இந்த அடிப்படை வரலாற்று அறிவு இல்லாமல், இதில் ஒரு தரப்பை வில்லனாக ஆக்கியது மாபெரும் தவறு. சோழரை அழிக்க வந்த, ஒரு குறுநில மன்னர் வம்சம் என்று கதை சொல்லியிருந்தால், சிக்கல் எழுந்திருக்காது.

நாம் ஏற்கனவே ஜெண்டில்மேன் பற்றிய பதிவில் சொன்னபடி, எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் பற்றிய சமூக வரலாற்றுப் பிரக்ஞை இல்லாவிட்டால், இப்படிப் பெரும் சிக்கலில் தான் திரைக்கதை முடியும்.


அடுத்து…

இந்தப் படம் உருவான நேரத்தில் ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. எனவே அதையும் கிளைமாக்ஸில் கலந்து, குழப்பினார்கள். அதுவரை பாண்டியர்-சோழர் என்று போனகதை, சிங்களர்-தமிழர் பற்றிய குறியீட்டுக் கதையாக ஆனது. பாண்டிய-சோழர் பிரச்சினையும் ஈழப்பிரச்சினையும் ஒன்றல்ல.

உண்மையில் பார்த்திபன் – ஈழத்தமிழர், ரீமாசென் – சிங்களர்& இந்தியா, கார்த்தி – பிரபாகரன் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துகொண்டு, திரைக்கதையை ஏகப்பட்ட குறியீடுகளுடன் அமைத்திருந்தால், அட்டகாசமான ஃபேண்டஸியாக வந்திருக்கும்.

அடுத்து….

சரி..இந்தக்கதை ஆக்சனும் அட்வென்ச்சரும் கலந்த ஃபேண்டஸி என்று வைத்துக்கொள்வோம். திரைக்கதையில் அடுத்து வந்த பிரச்சினை, பெரும்பாலான காட்சிகள் செல்வராகவனின் ஃபேவரிட் ‘செக்ஸுவல் டிராமா’ ஜெனரை ஒத்திருந்தன.

செல்வராகவன் படம் என்றால், செக்ஸ் சீன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும். செல்வராகவன் ஜெனர் என்று எதுவும் கிடையாது. செல்வராகவன் முதலில் சொன்ன ‘Coming to Age’ கதைகளுக்கு செக்ஸ் அடிப்படையாக இருந்தது. அதையே ஃபேண்டஸி ஜெனருக்குள் நுழைத்தபோது, குமட்டிவிட்டது.

ஃபேண்டஸி என்பதே சிக்கலான, நம்ப முடியாத ஒரு விஷயத்தை ஆடியன்ஸுக்கு உறுத்தாமல் சொல்வது தான். நம் ஆட்கள் சிலருக்கு ஃபேண்டஸி என்றால், ஹெவியாக அடர்த்தியாக இருக்க வேண்டும் எனும் தவறான எண்ணம் இருக்கிறது. ஆக்சன், அட்வென்ச்சர், லவ், செக்ஸ், ஃபிலிம் நுஆரின் ஏமாற்றம் என எல்லாவற்றையும் கலந்துகட்டி, பிச்சைக்காரன் பாத்திரம்போல் ஆக்கினால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

உண்மையில் ஃபேண்டஸி கதைகள் தான் இருப்பதிலேயே சிம்பிளாக இருக்க வேண்டும், நெஞ்சம் மறப்பதில்லை & நான் ஈ போல!

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - II - பகுதி 51"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.