Tuesday, May 19, 2015

தொட்டால் தொடரும் - ஒரு அலசல்

திரைவிமர்சகர், விநியோகஸ்தர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்ட பதிவர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் வெளியான படம், தொட்டால் தொடரும். அப்போது குவைத்தில் ரிலீஸ் ஆகாததால் பார்க்க முடியவில்லை. ’நம்ம கேபிள் கலக்கிட்டார்’ என்று ஒரு குரூப்பும் ‘சொதப்பிட்டார்’ என்று இன்னொரு குரூப்பும் அடித்துக்கொள்ள, படம் பார்க்கும் ஆர்வம் பன்மடங்காகியது! இப்போது தான் படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நெட்டில் ரிலீஸ் செய்த புண்ணியவான்களுக்கு நன்றி!

உண்மையில் பிரமாதமான ஒன்லைன். தன் தம்பியின் உயிரைக் காப்பற்ற நினைக்கும் ஹீரோயின், இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தன் உயிரையே வில்லன் கும்பலிடம் பணயம் வைக்கிறாள். பின் ஹீரோவின் துணையுடன் அந்த ஆபத்தில் இருந்து எப்படி மீண்டாள் என்பதே கதை. ‘வலியத் தேடிக்கொண்ட ஆபத்து’ என்ற புதுமையான விஷயத்தை எடுத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார்.

அமைச்சரான பிரமிட் நடராஜன் ஒரு ஆக்சிடென்ட்டில் கொல்லப்படுவதுடன் படம் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் 'பாஸு..பாஸு' டைட்டில் பாடலும் மனதை ஈர்க்க, நிமிர்ந்து உட்கார்கிறோம்.

அன்பான, அழகான, மனிதநேயமுள்ள பெண்ணாக ஹீரோயின் அருந்ததி அறிமுகம் ஆகிறார். கூடவே, ஹீரோ தமனுடன் காமெடியன் 'வேடத்தில்' வரும் பாலாஜியுடன் அறிமுகம் ஆகிறார். பாலாஜி செய்யும் கூத்தால் ஹீரோ-ஹீரோயின் இடையே ஒரு ஃபோனிலேயே மோதல் வெடிக்க, பின்னர் அது நட்பாகிக் கா...த...லா...கி..ற..து. இடையிடையே அமைச்சர் மகன், ஒரு போலீஸ்கார் துணையுடன் அமைச்சர் கொலையை புலன்விசாரணை செய்கிறார்.

இதிலேயே ஏறக்குறைய முக்கால்மணி நேரம் ஓடிவிடுவது தான் சோதனை. 'என்ன ஆச்சு? அமைச்சர் கொலை..அதுக்கு விசாரணை..ஹீரோ-ஹீரோயின் மோதல்..அப்புறம் காதல்..அப்போ கதை?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கும்போது, இயக்குநரும் உஷாராகி கதைக்கு வருகிறார். ஹீரோயின் தம்பிக்கு ஆக்சிடெண்ட், அதற்குப் பணத்தேவை. ஹீரோயின் ஏற்கனவே ஒரு எல்.ஐ.சி.பாலிசி எடுத்திருக்கிறார்.

'ஆக்சிடென்ட் போலவே கொலை செய்யும் கும்பல்' பற்றி ஹீரோயினுக்குத் தெரியவருகிறது. அவர்கள் அடுத்துக் கொலை செய்யத் திட்டமிடும் பெண்ணின் போட்டோவிற்குப் பதில் தன் ஃபோட்டோ கிடைக்கும்படி செய்கிறார் ஹீரோயின். அங்கேயிருந்து தான் படம் வேகம் எடுக்கிறது. வில்லன் கும்பல் வெறிகொண்டு ஹீரோயினைத் துரத்த, விஷயம் தெரிந்து ஹீரோவும் களத்தில் குதிக்க, இன்னொரு பக்கம் அமைச்சரின் மகனும் வில்லன்களைத் துரத்த பரபரவெனக் காட்சிகள் நகர்கின்றன. கிளைமாக்ஸ்வரை ஒரு துப்பறியும்ன் நாவல் போல் செம விறுவிறுப்பு.

படத்திற்கு பலமும் அதுதான், பலவீனமும் அது தான். வேகமாகக் கதை நகரவேண்டும் எனும் ஆர்வத்தில் காட்சிகள் சட்-சடென்று முடியும்படி அமைத்திருக்கிறார்கள். இதனால் எதுவுமே மனதில் பெரிதாகப் பதியாமல் போவது தான் பலவீனம்.

ஹீரோ ஆக்சன் ஏரியாவில் டம்மியாகவே வருவது இன்னொரு பிரச்சினை. ஹீரோயினைக் காப்பார்றுவதைக்கூட போலீஸ் நண்பனும், அமைச்சர் மகன் குரூப்பும் தான் ஆக்டிவ்வாகச் செயல்படுகிறார்கள். ஹீரோ பெரும்பாலும் இன் -ஆக்டிவ்வாகவே வருகிறார். இது யதார்த்தக்கதையே இல்லை எனும்போது, ஹீரோ கேரக்டரை ஏன் இவ்வளவு யதார்த்தமாகப் படைத்தார்கள் என்று தெரியவில்லை. ஹீரோயினைத் தவிர வேறு எந்தக் கேரக்டருமே ஒட்டாமல் போனது தான் பெரும் சோகம். அதனாலேயே அவ்வளவு பரபரப்பான கிளைமாக்ஸைக்கூட, நாம் மனம் ஒன்றிப் பார்க்கமுடிவதில்லை.

1) அமைச்சர் கொலையும் அது பற்றிய விசாரணையும் ஒரு சீகுவென்ஸ் (அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு வலுவான, நன்கு தெரிந்த ஒரு நடிகரைப் போட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஜெண்டில்மேன் சரண்ராஜ் போன்ற கேரக்டர் அது. இங்கேயோ மொக்கையாக யாரோ ஒரு புதுமுகம் வருகிறார். கூடவே அமைச்சரின் மகனாக ஒரு சீரியல் நடிகர். விளைவு..இந்த சீகுவென்ஸ் நம் மனதில் ஒட்டவே இல்லை.)

2)ஹீரோயின் குடும்பக்கதை ஒரு சீகுவென்ஸ். ( சித்தியும் அப்பாவும் கொடுத்திருப்பது ஆஸ்கார் பெர்ஃபார்மன்ஸ். அவர்களைப் பார்த்த செகண்டிலேயே சீரியல் எஃபக்ட் வந்துவிடுகிறது. சித்தி சீன் நான்கு தான் இருக்கும். அது கொடுக்கும் இம்பாக்ட் இண்டர்வெல்வரை அதிர வைக்கிறது. மோசமான கேஸ்டிங்)

3)காமெடியன் (!) பாலாஜியின் காமெடியுடன் ஹீரோவின் காதல் கதை ஒரு சீகுவென்ஸ் (காதல் கோட்டைக் கால காதல் என்றாலும் ஹீரோ-ஹீரோயின் இடையே நட்பும் காதலும் மலர்வதை ரசிக்க முடிந்தது. ஆனால் காமெடி என்ற பெயரில் பாலாஜி வாயால் ட்வீட்டிக்கொண்டே இருப்பது தான் கொடுமை. இவரை காமெடியன் என்று சொல்வதே பெரிய ஜோக் தான். கொஞ்சம்கூட இவரது காமெடி எடுபடவில்லை. சந்தானம் இல்லாவிட்டாலும், சதீஷாவது இதைச் செய்திருக்க வேண்டும்.)

4) மெயின் வில்லன்+ ரிப்போர்ட்டர் கதை ஒரு சீகுவென்ஸ்.

மேலே பிராக்கெட்டில் சொல்லியிருக்கும் விஷயங்களால், குறிப்பாக தவறான நடிகர் தேர்வால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. என்ன தான் திரைக்கதையில் கோட்டை கட்டினாலும், சரியான கேஸ்ட்டிங் இல்லாவிட்டால், என்னாகும் என்பதற்கு இந்தப் படம் ஒரு நல்ல உதாரணம்.

ஏனோ தமன்மேல் எனக்கு ஆரம்பத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் படத்தில் பார்க்கும்போது, இவர் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. ஒரு ஹிட் படம் அமைந்தால், முண்ணனி நடிகராகிவிடுவார். அருந்ததி திட்டியதும் முகம் சுண்டிப்போவது, அவரைக் காப்பாற்றத் துடிப்பது, சின்ன சின்ன எக்ஸ்பிரசனைக்கூட அழகாக வெளிப்படுத்துவது என கிடைத்த டம்மி கேரக்டரிலும் அழகாக ஸ்கோர் செய்கிறார்.

அருந்ததியின் முகம், மிடில் கிளாஸ் பெண் கேரக்டருக்குப் பொருந்திப்போகிறது. க்ளோசப்பில் முதிர்ச்சி தெரிந்தாலும், தமிழில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ள நடிகை. இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் என்று சொன்னார் இயக்குநர். அருந்ததியை வைத்து 'ரொமாண்டிக்' எஃபக்ட் கொண்டுவர முடியும் என்று எப்படி நம்பினாரோ தெரியவில்லை. ஹோட்டல் சீனில் ரொமாண்டிக்காக அருந்ததி ஹீரோவை அணுக, அவர் பதறிப்போய் 'நீயும்...உன் ரொமான்ஸும்.. சாத்தானே அப்பாலே போ' என்று விரட்டிவிடுவது தெளிவு!

‘பசங்க மனசு ரஜினி படம் மாதிரி..பொண்ணுங்க மனசு கமல் படம் மாதிரி’, 'புரட்சிக்கனல்ன்னு சொல்லிட்டு ஏ.சில இருக்கீங்க?, சாகணும்ன்னு எடுத்த ரிஸ்க்கை விட வாழணும்ன்னு எடுக்கிற ரிஸ்க் அதிகமா இருக்கு' என பல இடங்களில் வசனங்கள் அருமையாக இருந்தது. ஆனால் தாஸை விசாரிக்கும் சீனில் ‘நயந்தாரா-ஆர்யா’ என்று பேசுவது ரொம்ப ஓவர்!

இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் சேஸிங் காட்சிகளில் அசத்தியிருப்பது. ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் கவனிக்க வைக்கிறார். பாஸு..பாஸு & யாருடா மச்சான் பாடல்கள் தவிர மீதி படத்தில் தேறவில்லை.

ஹீரோ கிரவுட் ஃபண்டிங் முறையில் நெட்டிசன்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் திரட்டிக் கொண்டுவருவதாக காட்சி வருகிறது..அம்மே! கேபிளாரின் நல்லநேரம், சாருநிவேதிதா இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை!!

வில்லன்கள் ப்ளான் செய்வது, ஹீரோயின் தன் ஃபோட்டோவை வைப்பது, ஹீரோ பணம் கொண்டுவந்து பிரச்சினையை சால்வ் செய்வது இவை அனைத்துமே அடுத்தடுத்து 5 நிமிடங்களில் சொல்லப்படுகின்றன. இவற்றை ஜீரணிப்பதற்கான போதிய ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. காதலுக்கும் காமெடிக்கும் கொடுத்த நேரத்தை, இதற்குக் கொடுத்திருக்கலாம்.

ஹீரோயின் தன் ஃபோட்டோவை வைக்கும்போது, எத்தகைய ஆபத்தில் சிக்குகிறார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்லப்படவில்லை. 'மெயின் வில்லனே நினைத்தாலும், இந்தக்கொலையை நிறுத்த முடியாது' என்பது தான் இதில் இருக்கும் பேராபத்து. 'ஆக்ஸிடென்ட் போல் கொலை' என்பது உலகம் முழுக்க எப்படி நடத்தப்படுகிறது, அந்த குரூப் எப்படி இயங்குகிறது என்று அப்போதே நமக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முக்கால்வாசிப்படம் முடிந்தபின், ஒரு கேரக்டர் திடீரென இவர்களைப் பற்றி விவரிக்கிறது..டூ லேட்.

மேலும், இத்தகைய துப்பறியும் கதைகளில் ரீ-கேப் எனும் ஃப்ளாஷ்பேக் உத்தி மூலம் ஆடியன்ஸுக்கு என்ன நடந்தது என்று சொல்வது தொன்று தொட்ட வழக்கம். அது இல்லாத த்ரில்லர் படங்களே இல்லை என்று சொல்லலாம். கேபிளார் இதில் புதுமையாக, அந்த ஃப்ளாஷ்பேக் உத்தியே இல்லாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஆடியன்ஸ் கவனமாக இல்லாவிட்டால் ‘ஏன் இது நடக்கிறது’ என்றும் புரியாது, யார் இவர்கள் என்றுகூட சில இடங்களில் குழப்பிவிடும். ஆனால் கேபிளாருக்கு ஆடியன்ஸ் மேல் அபார நம்பிக்கை போலும்.

எந்தவொரு இடத்திற்கும் ரீகேப்பே போடாமல் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். உதாரணமாக, மெயின் வில்லனிடம் ஹீரோ ‘ஹீரோயினைக் கொல்ல வரும் அடியாளைக் கூட்டிவா’ என்று சொல்கிறார். அவன் வேறு ஆளை அழைத்து வருகிறான். ஏன் என்பதற்குப் பதில் முன்பே வேறொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வில்லனுக்கே அடியாளைத் தெரியாது என்பதை மீண்டும் நமக்குச் சொல்லாமல் அந்த சீனை அமைத்திருக்கிறார்கள். விளைவு, அந்தப் படத்திலேயே வரும் டயலாக் போன்று ‘கமல் படம் மாதிரி’ ஆகிவிடுகிறது.

சமீபத்தில் வந்த பிசாசு படத்தில் பச்சை-சிவப்பு சஸ்பென்ஸ் உடையும்போது, மிஸ்கின்கூட ஃப்ளாஷ்பேக் ஷாட்கள் மூலம் என்ன நடந்தது என்று விவரித்துச் சொல்லியிருப்பார். ’அது தேவையில்லாத வேலை. அதைச் செய்யாமல் விட்டிருந்தால் படம் Krzysztof Kieślowski-ன் படத்தின் தரத்திற்கு உயர்ந்திருக்குமே’ என்று நினைத்திருக்கிறேன். மிஷ்கின் ஏற்கனவே நம்மை நம்பி ஏமாந்தவர் என்பதால், உஷாராகி அங்கே ரீகேப் போட்டிருப்பார். கேபிளார் அதைச் செய்யாமல் Kieślowski ஸ்டைலில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். விளைவு, கிளைமாக்ஸ் பலருக்கும் புரியவில்லை. முதல் படத்திலேயே இந்த டெக்னிகல் ரிஸ்க் தேவையா என்று தோன்றினாலும், நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம் இது.

கதையை ஹீரோ சப்ஜெக்ட்டாக மாற்றினால், இதுவொரு அதிரிபுதிரி ஆக்சன் படமாக ஆகியிருக்கும். ஆனால் அப்படியெல்லாம் ஹீரோ பில்டப் படமாக எடுக்காமல், ஹீரோயின் ஓரியண்டேட் சப்ஜெக்ட்டாகவே எடுத்த தைரியத்திற்கு கிளாப்ஸ்.

மொத்தத்தில் திரைக்கதையின் விறுவிறுப்பான பகுதிகள் மோசமான கேஸ்ட்டிங்கால் எடுபடாமல் போயிருக்கின்றன. நல்ல கேஸ்ட்டிங் உள்ள பகுதிகளில் லாஜிக் இடித்து, திரைக்கதை சொதப்பியிருக்கிறது.  கேபிளார் அடுத்த படத்தில் இதைச் சரிசெய்தால், வெற்றி நிச்சயம்!

 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.