Tuesday, June 10, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-6)


6.உங்கள் கதைநாயகர் யார்?

கதை என்பது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மக்களிடையே புழங்கி வரும் மூத்த கலை. மனிதன் எப்போது மொழியை உருவாக்கினானோ அப்போதே கதையையும் உருவாகி இருக்கலாம். யார் கண்டது, மனிதன் சொன்ன முதல் பொய்யே கதை உருவாக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கலாம். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் மெயின்கதையுடன், நூற்றுக்கணக்கான கிளைக்கதைகளும் உள்ளன. அவையெல்லாம் இதிகாசங்கள் எழுதப்படும் முன்பே, மக்கள் மத்தியில் நாட்டுப்புறக்கதைகளாக பழக்கத்தில் இருந்தவை. ராமாயணமும் பல்வேறு வடிவில் நாட்டுப்புறக்கதைகளில் சொல்லப்பட்டு வந்துள்ளன. 

எனவே திரைக்கதை எழுதப்போகும் உங்களுக்கு வேண்டுமானால், கதை சொல்வது புதிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்கும் மக்களின் ஜீன்களிலேயே கதை கேட்பது ஊறிப்போய் உள்ளது. ஒரு கதையென்றால் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு உண்டு. அதில் முக்கியமானது யாரைப் பற்றிய கதை எனும் தெளிவு. கதையின் மையம் யார்? நாயகர் யார் என்பது அடிப்படையான விஷயம். அதில் நீங்கள் தெளிவாக இல்லாவிட்டால்...

சமீபத்திய ஒரு உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். நல்ல கமர்சியல் பட இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய ஏழாம் அறிவை எடுத்துக்கொள்வோம். வணிகரீதியில் சரியாகப் போகாதப் படம் அது. அந்த படத்தின் கதை என்ன?

போதி தர்மன் என்ற தமிழர் அரச வம்சத்து ஞானி முன்பு இங்கே வாழ்ந்துவந்தார். புத்த மதத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சீனா சென்று மதத்தையும் அரிய கலைகளையும் பரப்பினார். அந்த போதி தர்மனின் வம்சாவளி இங்கே இப்போது வாழ்ந்து வருகிறது. சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துவரும் ஹீரோ, அந்த வம்சாவளியைச் சேர்ந்தவன்; அவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப் பெண் போதி தர்மனின் மரபணு பற்றி ஆராய்ச்சி செய்து வருபவள். மீண்டும் போதி தர்மனின் இயல்புகளை ஹீரோவிடம் உயிர்ப்பிக்க முடியும் என்று கண்டுபிடிக்கிறாள். இந்த ஆராய்ச்சியை அறிந்த சீனா, ஒரு வில்லனை அனுப்பி ஆராய்ச்சியை நிறுத்தப்பார்க்கிறது. போதி தர்மனைப் பற்றியும் ஆராய்ச்சி பற்றியும் புரிந்துகொண்டு, ஹீரோயினுக்கு உதவ முன்வருகிறான். போதி தர்மனின் இயல்பு, ஹீரோவுக்குள் தடை பல மீறி தூண்டப்பட, சீனா வில்லனை வெற்றிகொள்கிறார் ஹீரோ. காதலும் வெல்கிறது. 

இது ஒரு வித்தியாசமான கதை என்பதை படம் பார்த்த எல்லாருமே ஒத்துக்கொண்டார்கள். ஆனாலும் படம் எல்லோருக்கும் திருப்தி தரவில்லை. இந்த கதையின் மையம் யார்? இது போதி தர்மனின் கதை என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. இயக்குநரும் அப்படியே நம்பினார். ஆனால் இது போதி தர்மனைப் பற்றிய படம் அல்ல, போதி தர்மனின் வாரிசு பற்றிய படமும் அல்ல. இது ஒரு கல்லூரி மாணவியின் கதை. இப்போது கதையை மீண்டும் பார்ப்போம்.

மரபணு ஆராய்ச்சி செய்யும் மாணவி தான் ஹீரோயின். நமது மூதாதையரின் இயல்புகளை நம் உடலிலும் தூண்டிவிட முடியும் என்று கண்டுபிடிக்கிறாள். தமிழ் சான்றோர்களில் போதி தர்மனின் வரலாறு அவளைக் கவர்கிறது. எனவே போதிதர்மனின் வம்சாவளியை அவள் தேடிக் கண்டுபிடிக்கிறாள். ஹீரோ அந்த வம்சாவளியைச் சேர்ந்தவன். அவளைக் கண்டதுமே காதலில் விழுகிறான். காதலைப் புறம் தள்ளும் அவள், ஆராய்ச்சியில் உதவ அவனைக் கேட்கிறாள். 

சீனாவிற்கு இந்த ஆராய்ச்சி பற்றித் தெரியவருகிறது. அதைத் தடுக்க டோங் லீ எனும் வில்லனை அனுப்புகிறது. ஹீரோயினும் ஹீரோவும் வில்லனிடம் இருந்து தப்பி, ஒரு மறைவிடத்தில் ஆராய்ச்சியைத் தொடர்கிறாள். வில்லன் அவளை நெருங்கும்வேளையில், ஆராய்ச்சி வெற்றிபெறுகிறது. ஹீரோவிற்கு போதி தர்மனின் இயல்பு வந்துவிடுகிறது. (இதில் ஒரு லாஜிக் மிஸ்டேக் உண்டு..அது இப்போது வேண்டாம்!). ஹீரோ வில்லனை அடித்து நொறுக்குகிறான். ஹீரோயின் தன் குறிக்கோளில் வெற்றி பெறுகிறாள்.

திரைக்கதையின் மூன்று அடிப்படைத் தேவைகளோடு இதை ஒப்பிடுவோம்:

ஹீரோ(யின்) : கல்லூரி மாணவி
குறிக்கோள் : மரபணு ஆராய்ச்சியில் வெற்றி அடைவது
வில்லன் : சீனா + டோங் லீ

எனவே இந்த கதையின் மையமே ஹீரோயின் கேரக்டர் தான். ஹீரோ ஒரு துணை கேரக்டர் தான். ஆனால் ஹீரோயினை மையப்படுத்தாமல், ஹீரோவைச் சுற்றியே காட்சிகள் பின்னப்பட்டதால் படம் நமக்கு முழு திருப்தி தராமல் போனது. தொடரின் பின்னால் வரும் பாகங்களில் இதை இன்னும் விளக்குவோம். 

ராமாயணத்தை படமாக எடுத்தால், அங்கே ராமன் தான் மையம். தசரதனையும் அவர் (ஜஸ்ட்) அறுபதாயிரம் மனைவிமார்களை எப்படி மேய்த்தார் என்பதையும் விவரிப்பதில் இறங்கக்கூடாது.  எனவே நமக்குப் பிடித்த சப்ஜெக்ட்டாக இருந்தாலும், தசரதனைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது உத்தமம். கதையின் நாயகர் யார் என்பதில் தெளிவாக இருங்கள். அப்போது தான் ஒன் லைன் திரைக்கதை ஆகும்போது சரியான பாதையில் செல்வீர்கள்.

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் ஒன்லைனை மீண்டும் பார்ப்போம். “பலரது லவ்வுக்கும் ஐடியா கொடுத்து ஹெல்ப் பண்ணும் ஒருவன், ஹீரோவும் காதலில் ஜெயிக்க உதவுகிறான். பின்னர் தான் தெரிகிறது, ஹீரோ லவ் பண்ணியது தன் தங்கச்சியை என்று! ” இதில் உண்மையான ஹீரோ யார்? சந்தேகமே இல்லாமல் சந்தானம் தான். அதனால்தான் படத்தின் ஹீரோவான சித்தார்த்தைவிட, கதையின் ஹீரோவான சந்தானத்திற்கு அதிக காட்சிகள் இருக்கும்.

எனவே உங்கள் கதையின் ஹீரோ யார் என்பதைக் கண்டுபிடியுங்கள். அதற்கான எளிய வழி, கதையில் யார் அதிக விசையுள்ள குறிக்கோளுடன் உள்ளாரோ அவரே கதையின் நாயகர்.

டிஸ்கி: தமிழில் “ர்” விகுதி ஆண்பால்-பெண்பால் இரண்டிற்கும் பொருந்தும் என்பதாலேயே நாயகர் என்று சொல்லியுள்ளேன். ’நாயக்கர் என்பதை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதிவிட்டான்’ என்று ஜாதிக்கலவரத்தை தூண்டி விடாதீர்கள்!


 (ஞாயிறு...தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

13 comments:

  1. நல்ல விளக்கம்,ஏழாம் அறிவு திரைப்படக் கரு/கதை உட்பட!

    ReplyDelete
  2. உண்மை..ஏழாம் அறிவு பார்த்த போது நானும் இதை பீல் செய்தேன். அந்த லாஜிக் மிஸ்டேக் என்னன்னு சொல்லலாமே.

    ReplyDelete
  3. அட ஆமால்ல, ஏழாம் அறிவு படம் நாயகிக்குதான் முக்கியத்துவம் கொடுத்துருக்கணும், இங்கே ஹீரோ சென்டிமென்ட் வேற இருக்கே ராஜா !

    ReplyDelete
  4. நன்றி அண்ணா அதே போல போதி தர்மன் வரும் பகுதியை ஆவணப்பட சாயலில் இல்லாமல் ஒரு பிளாஸ்பேக்காகக் காட்டியிருந்தால் படத்திற்குள் நாம் ஆரம்பத்திலேயே நுழைந்த ஒரு உணர்வு கிடைத்திருக்கும் என்பது எனது எண்ணமாக இருந்தது.

    ReplyDelete
  5. அதே போல விளம்பரத்துக்காக ஈழத்தை இதற்குள் இழுத்துக் கொண்டு வந்தது எனக்கு கொஞ்சம் கடுப்பேற்றியிருந்தது.

    ReplyDelete
  6. நல்ல விளக்கம் போதி தர்மன் இன்னும் யாதார்த்தம் பேசி இருக்கலாம் இடையில் ஈழம் ,அரசியல் என்று!ம்ம் ஒன் லைன் முக்கியம்! தொடர்கின்றேன்.

    ReplyDelete
  7. //Subramaniam Yogarasa said...
    நல்ல விளக்கம்,ஏழாம் அறிவு திரைப்படக் கரு/கதை உட்பட!//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  8. //கோவை ஆவி said...
    உண்மை..ஏழாம் அறிவு பார்த்த போது நானும் இதை பீல் செய்தேன். அந்த லாஜிக் மிஸ்டேக் என்னன்னு சொல்லலாமே.//

    போதி தர்மனின் குணாதிசயத்தைத் தான் மீட்டெடுக்கிறார்கள். அதை உபயோகித்தால், சூர்யா சண்டைக்கலையை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஏதோ போதி தர்மனின் ஆவி சூர்யா உடலில் புகுந்தது போல் உடனே சண்டை போட ஆரம்பித்துவிடுவார், படத்தை முடிக்க!

    ReplyDelete
  9. //MANO நாஞ்சில் மனோ said...
    , இங்கே ஹீரோ சென்டிமென்ட் வேற இருக்கே ராஜா !//

    ஆமாண்ணே..உண்மை தான்.

    ReplyDelete
  10. //mathi sutha said...
    நன்றி அண்ணா அதே போல போதி தர்மன் வரும் பகுதியை ஆவணப்பட சாயலில் இல்லாமல் ஒரு பிளாஸ்பேக்காகக் காட்டியிருந்தால் படத்திற்குள் நாம் ஆரம்பத்திலேயே நுழைந்த ஒரு உணர்வு கிடைத்திருக்கும் என்பது எனது எண்ணமாக இருந்தது.//

    கரெக்ட்..போதி தர்மனை முதலிலேயே காட்டியது தவறு. பிறகு சாதா சூர்யாவை பார்க்க சப்பையாகத் தெரிந்தது.

    ReplyDelete
  11. //mathi sutha said...
    அதே போல விளம்பரத்துக்காக ஈழத்தை இதற்குள் இழுத்துக் கொண்டு வந்தது எனக்கு கொஞ்சம் கடுப்பேற்றியிருந்தது.

    தனிமரம் said...
    நல்ல விளக்கம் போதி தர்மன் இன்னும் யாதார்த்தம் பேசி இருக்கலாம் இடையில் ஈழம் ,அரசியல் என்று!ம்ம் ஒன் லைன் முக்கியம்! தொடர்கின்றேன்.//

    அது வியாபாரத்திற்காகச் செய்த வெட்டி வேலை.

    ReplyDelete
  12. ஏழாம் அறிவில் நீங்க சொன்ன முதல் கதை முருகதாஸ் டிவி பேட்டியில் நமக்கு சொன்னது, ரெண்டாவது கதை உண்மையில் படத்தில் இருந்தது.. btw ஏழாம் அறிவு திரைபடத்தை மேலும் ஆராய்பவர்களுக்கு நம்ம புட்டிபாலின் இந்த பதிவு கொஞ்சம் பயன்படலாம்...
    ஏழாம் அறிவு - திரை விமர்சனம் (செமி போஸ் மார்டம்)
    http://realsanthanamfanz.blogspot.com/2011/10/blog-post_27.html

    ReplyDelete
  13. @மொ.ராசு (Real Santhanam Fanz ) அந்த விமர்சனம் தான் ஏழாம் அறிவுக்கு வந்ததிலேயே டாப்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.