Sunday, May 11, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-1)


உப தலைப்பு :சினிமா எனும் காஸ்ட்லி கலை

கலை என்பதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம், பொழுதுபோக்கு. இரண்டாவது வாழ்வின் மேன்மையைப் பேசுவது; வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவது.  நமது காவியங்களான ராமாயணம், மகாபாரதமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. எழுத்து வடிவிலும், கவிதை வடிவிலும், கூத்து வடிவிலும், வில்லுப்பாட்டு வடிவிலும் மக்களிடையே சென்று சேர்ந்தன அந்தக் காவியங்கள்.

சிறந்த பொழுதுபோக்கு என்பதோடு, கருத்து சொல்வதையும் தன் கடமையாக அந்த கலைஞர்கள் நினைத்தார்கள். ஆனாலும் அந்த கலைகளிலும் பொழுதுபோக்கை மட்டுமே அதிகம் முன்வைக்கும் படைப்புகள் உண்டு. சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

சினிமா என்பது காஸ்ட்லியான கலை. ஒரு கதையோ கவிதையோ ஓவியமோ மக்களை சரியாகச் சென்றடையவில்லையென்றால், பெரிய பொருள் நஷ்டம் இல்லை. ஆனால் ஒரு சினிமா உண்டாக்கும் நஷ்டம், பல மனிதர்களை தெருவுக்குக் கொண்டுவந்துவிடும். மேலும் மற்ற கலைகளில் படைப்பாளியின் முதல் மட்டுமே முடங்கும். இங்கே பொதுவாக படைப்பாளி வேறு, தயாரிப்பாளர் வேறு. எனவே ஒரு படைப்பாளியின் கலைத்தாகம், தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்களை கஞ்சிக்கு வழியில்லாமல் ஆக்கிவிடும் அபாயம் இங்கே நிறைய உண்டு. எனவே தான் திரைத்துறையில் வணிக சினிமா முக்கிய இடம்பெறுகிறது. திரைக்கதை எழுதும்போது, இதை நினைவில் கொள்வது அவசியம்.

ரசிகனை திருப்திப்படுத்துவதை முதல் நோக்கமாகக் கொண்ட தரமான சினிமாவையே வணிக சினிமா என்கிறோம். இந்த தொடரில் வரும் வணிக சினிமா என்பது ஆறு பாட்டு+அஞ்சு ஃபைட்டு+அப்போதைய பிரபல காமெடியனின் அச்சுப்பிச்சுத்தனம்+குத்துப்பாட்டு கொண்டு மட்டுமே உருவாக்கப்படும் குப்பைகளைக் குறிக்கவில்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். எந்திரன், அபூர்வ சகோதரர்கள், துப்பாக்கி, சூது கவ்வும் போன்ற படங்களையே நாம் தரமான வணிக சினிமா என்று குறிப்பிடுகிறோம்.

இத்தகைய தரமான வணிக சினிமாவைக் கொடுப்பவர்களுக்கு நல்ல கலைப்படங்களுடன் பரிச்சயம் இருக்கும். அத்தகைய படங்களைக் கொடுக்கும் ஆர்வமும் இருக்கும்.(உதாரணம் ஷங்கர்..பதினாறு வயதினிலே மாதிரி ஒரு கதையை இயக்கும் ஆர்வத்துடன் வந்தவர்..இப்படி ஆகிட்டார்!!) ஆனாலும் ரசிகனுக்காக கமர்சியல் ஐட்டங்களுடன் படைப்பை உருவாக்குவார்கள். ரசிகனும் குப்பை மசாலாக்களை ரசிக்கும் மனநிலையில் இருந்து மேலேறி, இந்த படங்களை ரசிப்பான். மொத்தத்தில் ஒரு படைப்பாளியும் ரசிகனும் சந்திக்கும் சமரசப்புள்ளியே வணிக சினிமா எனலாம்.

அதே போன்றே நல்ல கலைப்படங்களை/உலக சினிமாக்களைப் படைப்பவருக்கு, நல்ல வணிக சினிமா எடுக்கும் சூத்திரம் தெரிந்திருப்பது அவசியம். அது இருந்தால்மட்டுமே, சுவாரஸ்யமாக கதை சொல்ல முடியும். எந்த வகைப்படமானாலும், சுவாரஸ்யம் அவசியம். எனவே திரைக்கதை எழுத விரும்புவர்கள், வணிக சினிமாவுக்கு எழுதுவது நல்ல ஆரம்பமாக அமையும். உதாரணமாக உதிரிப்பூக்கள் கொடுத்த நம் மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன், அதற்கு முன்னால் தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம் போன்ற படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர்.  

வாழ்க்கையைப் பற்றி பேசும் அல்லது ஆராயும் நல்ல சினிமாக்கள், திரைத்துறையின் ஆன்மாவைப் போன்றவை. அந்த படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். அதற்கு போதுமான பணப்புழக்கம் சினிமாத்துறையில் இருக்க வேண்டும். சினிமாத்துறை வளமாக இருந்தால்தான் புதிய தயாரிப்பாளர்கள் உள்ளே வருவார்கள். அதற்கு வணிக சினிமா அவசியமானது. எல்லாருமே உலக சினிமாவே எடுத்தால், இரண்டு வருடங்களுக்குள் தயாரிப்பாளர்கள்-விநோகஸ்தர்கள்-தியேட்டர் அதிபர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே யதார்த்தம். கலைப் படங்கள் உயிர் என்றால், வணிக சினிமா என்பது உயிர் மூச்சு. அந்த மூச்சு நின்றால், எல்லாம் போச்சு!

எனவே திரைக்கதை எழுத கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வணிக சினிமா மீது எவ்வித வருத்தமும் இருக்கக்கூடாது. ஏனென்றால் சினிமாவின் மையப்புள்ளியும் ஆரம்பமும் அது தான். எடுத்தவுடனே முள்ளும் மலரும் படம் போன்று எழுத நினைத்தால், அது துலாபாரமாகவே ஆகும். எந்தவொரு படமுமே வேஸ்ட் அல்ல, குறைந்தபட்சம் எப்படி எடுக்கக்கூடாது என்று தெரிந்துகொள்வதற்காவது அந்தப் படம் உதவும். சிலநேரங்களில் ஒரு மொக்கைப்படத்தில்கூட நல்ல விஷயம் இருக்கும். எனவே கொஞ்சம் பரந்த மனதுடன், சினிமாவை அணுகுவோம்.

வணிக சினிமாவின் திரைக்கதைகள் எளிமையானவை. குறிப்பிட்ட விதிகளின் கீழ் அடங்குபவை. ஆனால் கலைப்படங்கள், அப்படி அல்ல. அவை இருக்கும் விதிகளை கலைத்துப்போடும் தன்மை கொண்டவை. நேர்கோட்டுப் பாணி, ஒரே ஒரு கதை என்றெல்லாம் இல்லாமல் பலவித பரிசோதனைகளும் நடக்கும் இடம், கலைப் படங்கள். ஆரம்ப நிலையிலேயே அதற்குள் தலைவிடுவது, நம் மனநிலைக்கு நல்லதல்ல என்பதால் அதை ஓரமாக வைத்துவிட்டு அடிப்படையில் இருந்து ஆரம்பிப்போம்.

தமிழ் சினிமாவுலகின் முன் நிற்கும் பெரும் சவால், மக்களை தியேட்டருக்குக் கொண்டுவருவது தான். ஏகப்பட்ட டிவி சேனல்கள், அதில் எந்நேரமும் ஓடும் தமிழ்/ஹாலிவுட்/சீன படங்கள், சீரியல்கள், தியேட்டர்களில் வெளியாகும் பிரம்மாண்ட ஹாலிவுட் டப்பிங் படங்கள், தியேட்டர் கட்டணம், திருட்டு விசிடி என பல வில்லன்களைத் தாண்டித்தான் ஒரு சினிமா மக்களைச் சந்திக்கிறது.

ஏற்கனவே வெளியான படங்களின் கதை அல்லது டெம்ப்ளேட்டிலேயே நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள் என்றால், டிவியிலேயே அதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஹாலிவுட் படத்தைச் சுட்டாலும் அதே பிரச்சினை தான். (நம் இணையதள எழுத்தாளர்கள் எப்படியாவது கண்டுபிடித்து கிழிகிழியென்று உங்களைக் கிழித்துவிடுவார்கள்.)
 தயாரான 200 படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் லேபிள் முடங்கிக்கிடக்கின்றன என்பது தற்போதைய நிலவரம். மொத்தமாக 300 கோடி ரூபாய் முதல் முடங்கிக் கிடக்கிறது. அந்த 200 திரைக்கதைகளுமே ஏகப்பட்ட கனவுகளுடன் எழுதப்பட்டிருக்கும். அதில் சில ஆர்வக்கோளாறுகள் இருந்தாலும் சில நல்ல படைப்புகளும் இருந்தே தீரும். 

அவை ரிலீஸ் ஆகாமல் கிடப்பதற்கு ஃபேமஸான இயக்குநர்/நடிகர்/நடிகை பணியாற்றாததும் காரணமாக இருக்கலாம், கோடிக்கணக்கான பணம் முடங்குவதற்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒருபோதும்..ஒரு போதும் திரைக்கதை காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் நாம் திரைக்கதை எழுத வேண்டியது அவசியம்.

திரைக்கதை எழுத ஆரம்பிக்கும் முன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் உண்டு. ஒரு கதையோ, கவிதையோ எழுதும்போது அதன்மேல் ஒரு பொசசிவ்னெஸ் நமக்கு வரும். அதில் யாராவது கரெக்சன் சொன்னால், ‘சீலேவில் இப்படியா? இந்து ஞானமரபு இப்படியா உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது? தற்குறிகள்!’ என்று கோபம்கூட வரலாம்.

ஆனால் சினிமா என்பது டீம் ஒர்க். இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர் என பலரும் தங்கள் கருத்தை திரைக்கதை மேல் திணிக்கவே செய்வார்கள். அதில் இயக்குநரின் முடிவே இறுதியானது. சில நேரங்களில் அப்படி சொல்லப்படும் கரெக்சன்கள், அவர்களது பலவருட அனுபவத்தின் மூலம் வரலாம். எனவே அதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிவரும். ‘இது என் படைப்பு. ஒரு எழுத்தைக்கூட மாற்றவிட மாட்டேன்’ எனும் இலக்கியத்தனம் அங்கே உதவாது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கதை-கவிதை போன்றவை காதலி மாதிரி. திரைக்கதை என்பது குழந்தை மாதிரி. ஆசிரியர், அண்டைவீட்டார், சமூகம் என பலரும் குழந்தையை மெருகேற்றுவார்கள். ஒரு கட்டத்தில் பெற்றோரைவிடவும் பெரிய ஆளாக அந்தக் குழந்தை உருவெடுக்கும். பிறந்த அன்று குட்டியாக ரோஜாப்பூ போன்று இருந்த குழந்தையா இது எனும் ஆச்சரியம் ஒருநாள் நமக்கு வரும். அப்போது அடையும் பூரிப்பைத் தான், உங்கள் திரைக்கதை காட்சிவடிவம் எடுத்து முழு சினிமாவாக வரும்போது அடைவீர்கள். எனவே திறந்த மனதுடன் இதில் இறங்க வேண்டியது அவசியம்.

ஓகே, திரைகதை எழுத ரெடியா?..பொறுங்க சாமிகளா! கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் முன், சிக்னல்ஸ்-கீப் லெஃப்ட்டா ரைட்டா என்பது போன்ற அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? எடுத்தவுடனே டாப் கியரில் வண்டியைக் கிளப்ப முடியுமா? ஆரம்பத்திலேயே ‘இன்சைட்டிங் இன்சிடெண்ட்’ என்று போவதற்கு முன் சில அடிப்படைகளை தெரிந்துகொள்வோம். அப்புறம் மெதுவா, சேஃபா களத்தில் இறங்கலாம்.

அடுத்த வாரம் கரு உருவாக்குவது எப்படி, கரு உருவாகிவிட்டதா என்று தெரிந்துகொள்வது எப்படி, அப்படி உருவான கருவை பாதுகாப்பது எப்படி என்று விபரமாகப் பார்ப்போம்!
(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

  1. அருமையான நடை. காதலி, குழந்தை உவமை சூப்பர்...

    ReplyDelete
  2. யோவ் இதை படிச்சுட்டு பயபுள்ளைங்க கோடம்பாக்கத்துக்கு படையெடுக்க போறாங்க...

    சிறந்த பேச்சாளரான எங்க அண்ணாச்சி பாலபிரஜாதிபதி அடிகளாரும் இப்படி சொல்வார், படத்தை படமாக எடுங்கள் பாம்பு படம் எடுக்குற மாதிரி எடுக்காதீர்கள் என்று.

    சிறப்பான பகிர்வு ! வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. அருமையான இயல்பான விளக்கத்துடன் ! தொடரட்டும் விளக்கம்!

    ReplyDelete
  4. சூப்பர் ஆஅ சொல்லி இருக்கீங்க ...வாழ்த்துக்கள் ...மகாத்மா காந்தின் வரிகளோடு ஒரு மகாத்மா தியானம் செய்வது அருமை.....

    ReplyDelete
  5. ஆரம்பத்திலேயே சில,பல விளக்கங்களைக் கொடுத்து,எங்களைத் தயார்படுத்தி விட்டீர்கள்.வரும் ஞாயிறு இன்னும் ஏழு நாட்கள்.....காத்திருப்போம்!///ரோஜாப்பூ உவமை செம!///

    ReplyDelete
  6. அன்று இலக்கியத்தனம் அதிகம், வணிகம் குறைவு...

    இன்று பணம் மட்டுமே - சிலரைத்தவிர...

    குழந்தை : திரைக்கதை - அட...!

    ReplyDelete
  7. ஆரம்ப பதிவே சுவாரஷ்யமா இருக்கே! மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //கலை என்பதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம், பொழுதுபோக்கு. இரண்டாவது வாழ்வின் மேன்மையைப் பேசுவது; வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவது.///

    இந்த டெஃபினிஷன் உங்களோடையதா, இல்ல நீங்க வாசிக்கிற லிட்டரேச்சர்ல இருந்தா தெரியல... ஆனா செம!

    ReplyDelete
  9. //கரு உருவாக்குவது எப்படி, கரு உருவாகிவிட்டதா///
    இதுக்கு சினேகா படம் போட்டது குறியீடுதானே?

    ReplyDelete
  10. // இயக்குநர், ஹீரோ, தயாரிப்பாளர் என பலரும் தங்கள் கருத்தை திரைக்கதை மேல் திணிக்கவே செய்வார்கள்.///

    சில வேளைகளில் இதுவே ஓவர்டோஸ் ஆகிவிடுவதும் பிரச்சினையே!


    நீங்க சொன்ன மாதிரி //இயக்குநரின் முடிவே இறுதியானது/// ஆனால், தமிழ் சினிமாவில் பல புது டைரக்டர்ஸ்க்கு அந்த வாய்ப்பு கொடுக்கபடுதா என்பது கேள்வியே!

    சமீபத்துல வந்த தெனாலிராமன்ல கூட, சின்ன வயசு டைரக்டர் ஒருத்தர பேருக்கு வச்சிகிட்டு திரைகதை பாதிக்கு மேல வடிவேலு டீமே மோல்ட் பண்ணுச்சாம்.. இப்போ அந்த பையன் திட்டு வாங்குறான்!

    ReplyDelete
  11. // A.Sri Rathnakumaar said...
    அருமையான நடை. காதலி, குழந்தை உவமை சூப்பர்...//

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  12. //MANO நாஞ்சில் மனோ said...
    யோவ் இதை படிச்சுட்டு பயபுள்ளைங்க கோடம்பாக்கத்துக்கு படையெடுக்க போறாங்க...//

    அது தானே இந்த தொடரின் நோக்கம்!

    ReplyDelete
  13. //தனிமரம் said...
    அருமையான இயல்பான விளக்கத்துடன் ! தொடரட்டும் விளக்கம்!//

    நன்றி நேசரே.

    ReplyDelete
  14. //கலை said...
    மகாத்மா காந்தின் வரிகளோடு ஒரு மகாத்மா தியானம் செய்வது அருமை.....//

    ம்க்கும்...நல்லவேளை காந்தி உயிரோட இல்லை.

    ReplyDelete
  15. //Subramaniam Yogarasa said...
    ரோஜாப்பூ உவமை செம!///

    அதை மறக்க முடியுமா!

    ReplyDelete
  16. //திண்டுக்கல் தனபாலன் said...
    அன்று இலக்கியத்தனம் அதிகம், வணிகம் குறைவு...//

    எப்போதும் சினிமாவில் வணிகம் தான் முதலாவது, தனபாலரே!

    ReplyDelete
  17. // மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    இந்த டெஃபினிஷன் உங்களோடையதா, இல்ல நீங்க வாசிக்கிற லிட்டரேச்சர்ல இருந்தா தெரியல... ஆனா செம!//

    நானா யோசிச்சேன்...!

    ReplyDelete
  18. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    //கரு உருவாக்குவது எப்படி, கரு உருவாகிவிட்டதா///
    இதுக்கு சினேகா படம் போட்டது குறியீடுதானே?//

    கோடு போட்டா, ரோடு போடறதுங்கிறது இது தான்.

    ReplyDelete
  19. சூப்பர்.. தொடருங்கள்...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.