Saturday, September 1, 2012

முருக வேட்டை_29

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே! – (கந்த சஷ்டிக் கவசம்)

பிக் பேங் தியரி” என்றான் சரவணன் ஆச்சரியத்துடன்.

"ஆம்..ஏறக்குறைய..அது மட்டுமல்ல பரிணாமத்தைப் பற்றியும் சாங்கியம் தெளிவான கொள்கையை வைத்திருந்தது. ஆதி இயற்கை என்பது அறிய முடியாதது, எவ்விதக் குணமும் இல்லாதது. அதன் சமநிலை குலைந்ததும் பரிசுத்தமான பிரக்ஞை உண்டானது. அதாவது உள்ளுணர்வு, அறிவு போன்றவை பற்றிய பிரக்ஞை உண்டானது. அதை வெளிப்படுத்த தன்னுணர்வு உண்டானது. அதன்பிறகே ஒலி, நிறம், மணம் போன்றவை உண்டாகின. அவற்றை உணர ஐம்புலன்கள் உண்டாகின. ஐம்புலன்களும் திறம்படச் செயல்பட, ஐந்து இந்திரியங்கள் (கைகள், கால்கள், வாய்) உண்டாகின. அவற்றின் மூலமே ஐந்து பருப்பொருட்களான நீர், நிலம், ஆகாயம், நெருப்பு காற்று அறியப்பட்டன. இந்த அனுபவங்கள் மனதை உண்டாக்கின. இந்த பரிணாம மாற்றத்தின் காரணமாகவே ஆதி இயற்கை உருமாறித் தற்போதைய பிரபஞ்சமாகத் தெரிகிறது. இவற்றை ஒரு ஞானி அறிவதே, விடுதலை தரும். இது தான் சாங்கியத் தரப்பின் சாரம். இந்தியச் சிந்தனை மரபில் சாங்கியம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இப்போது அது மற்ற தரிசனங்களுடன் கலந்துவிட்டது. சாங்கியத்தில் முக்கியமான விஷயம், அங்கே கடவுளுக்கு இடம் இல்லை.”

“என்னது கடவுள் கிடையாதா?” என்று ஆர்வமானான் சரவணன்.

”ஆம்..ஞானத்தை அடைய கடவுள், பக்தி போன்ற எதுவும் தேவையில்லை என்றே சாங்கியம் சொல்லியது. சாங்கியம் மட்டுமல்ல யோகம், வைசேஷிகம், நியாயம் ஆகிய அடுத்த மூன்று தரிசனங்களிலும் கடவுளுக்கு இடமில்லை அல்லது முக்கியத்துவம் இல்லை. கடவுளை நம்பாதவனையும் இந்து மதம் அரவணைப்பதற்குக் காரணம் இது தான். அந்த மாற்றுததரப்புக்கும் இங்கே இடம் உண்டு. ஏனென்றால் அதுவும் மாபெரும் ஞானிகளின் தரப்பு தான்..முன்பு..இப்போ அப்படி இல்லை.”

சரவணன் சிரித்துக் கொண்டான். விஸ்வநாதன் தொடர்ந்தார்.

“ஆமா..மனிதனின் சிந்தனையின் நோக்கமே மானுடத் துயரைத் தீர்ப்பது தான்னு சாங்கிய சரிகை சொல்லுது. மானுடத் துயருக்குக் காரணம் அறியாமை தான். அறியாமையே சந்தோசம்-வியப்பு-பயம்-கோபம் போன்ற உணர்ச்சிகளுக்குக் காரணம் என்று நம் முன்னோர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர். எனவே அந்த அறியாமையை அகற்றுவதற்கான வழிமுறைகளாக பல சிந்தனைகள், இந்த மண்ணில் தோன்றியது. அதில் செல்வாக்குப் பெற்ற ஆறு தத்துவங்களைப் பற்றித் தான் நாம இப்போப் பேசிக்கிட்டு இருக்கோம். அப்படி அறிதலுக்கான வழிகளில் ஒன்றாகத் தோன்றியது தான் யோகம்.”

“அது நாம இப்போப் பண்ற யோகா தானா?”

“ஆமா..இந்த யோகாசனங்கள் அதில் இருந்து வந்தது தான். யோகமும் சாங்கியம் சொன்ன பிரபஞ்சக் கொள்கையை ஏத்துக்கிச்சு. ஞானத்தை அடைவதற்கான வழிமுறைகளில் தான் இரண்டுக்கும் வித்தியாசம். ஆதி இயற்கை நம் மனதைப் போலவே சிதறுண்டு இருக்கிறது. எனவே நாம் மனதை ஒருமுகப்படுத்தி, தூயநிலைக்குக் கொண்டுசென்றால், நம்மால் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும் என்று நம்பிய யோகத் தரப்பு, அதற்கு எட்டு படிநிலைகளை உண்டாக்கியது. யமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை தான் அவை. இதில் ஆசனம் என்பதே நம் யோகாசனம். பிரணாயாமமும் நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்..மூச்சுப்பயிற்சி. இப்போ யோக தரிசனத்தில் மிஞ்சியிருப்பது இந்த இரண்டு மட்டும் தான்.”

“இதுக்கும் கடவுள் தேவையில்லைன்னு சொன்னீங்களே?”

“ஆம்..இது உடலை, மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியே யோகா. இதில் கடவுளுக்கு முக்கியத்துவம் இல்லை. கடவுள்ங்கிறது சும்மா ஒரு சப்போர்ட் தான் அதில்..எனவே தான் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களாலயும் இதைச் செய்ய முடியுது.”

“ஓ..இப்போத் தான் பல விஷயம் புரியுது” என்று சரவணன் யோசனையுடன் சொல்லும்போதே, ஹாலுக்கு வந்த அகிலா “சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே” என்று டைனிங் ஹாலுக்கு எல்லாரையும் அழைத்துச்ச் என்றாள்.

சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் விஸ்வநாதன் விட்ட இடத்தில் இருந்து துவங்கினார்.

“அடுத்த தரிசனம் நியாயம்..நியாயம்னா இப்போ நாம சொல்ற நியாயம் இல்லை..அந்த நியாயம், இந்திய மரபில் ஒரு தர்க்கத்தை எப்படி நிறுவுவது என்பது போன்ற விஷயங்களைச் சொன்னது.நாம் அறிந்த விஷயங்களைத் தொகுத்து, எப்படி ஒரு தெளிவான முடிவுக்கு வருவது என்பது போன்றவற்றை இது சொன்னது. இதன் பிரபஞ்சக் கொள்கையும் வைசேஷிகத்தின் பிரபஞ்சக் கொள்கையும் ஒன்னு தான்.”

”வைசேஷிகமா? அதை நீங்க இன்னும் சொல்லலியே?”

“ஆமா..விட்டுப்போச்சுல்ல..வைசேஷிகம் ரொம்ப சிறப்பான பிரபஞ்சக்கொள்கையைக் கொண்டிருந்துச்சு. அது என்ன சொல்லுச்சுன்னா...அணுக்களைக் கண்ணால் காண முடியாது. அணுக்கள் இணைந்து பொருட்கள் உருவாகின்றன. ஒட்டுமொத்தப் பொருட்களின் தொகுப்பே பிரபஞ்சம்”

”சார்..இது நியூக்ளியர் பிசிக்ஸ் சார்” என்று கூவினான் சரவணன்.

“ஹா..ஹா..ஆமா..” என்றார் விஸ்வநாதன்.

“அப்போ சைன்ஸ் கண்டுபிடிக்க முன்னாடியே நம்ம முன்னோர் இதை அறிஞ்சிருந்தாங்களா சார்?”

“ஆமா..கி.மு.ஐந்திலேயே இந்தக் கொள்கை இங்கே இருந்துச்சு. இங்கே மட்டுமல்ல, கிரேக்கத்திலும் அதுக்கப்புறம் இந்தக் கொள்கை உருவாச்சு”

“அப்போ கிரேக்கர்கள் நம்மளைக் காபி அடிச்சாங்களா சார்?” கேட்கும்போதே சரவணனுக்கு மார்ஸின் காப்பியே முருகன் என்று கேள்விப்பட்டது ஞாபகம் வந்தது.

விஸ்வநாதன் சரவணனின் கேள்வியைக் கேட்டு சத்தம் போட்டுச் சிரித்தார்.

(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

  1. இருங்க வாசித்துவிட்டு வாரன் ஒரு பால்க்கோப்பி சொல்லுங்க!ஹீ

    ReplyDelete
  2. ”வைசேஷிகமா? //ம்ம் இது இப்ப வழக்கில் இல்லை எனலாம்!ம்ம் நாகரிக வளர்ச்சி!ம்ம்

    ReplyDelete
  3. பிரணாயாமம்,//ம்ம் இது மூச்சை அடக்கும் வழி ஹானுமான் இதில் சூரன் எனலாம் ஆன்மீகத்தில் வாயுபுத்திரன்!ம்ம்

    ReplyDelete
  4. தொடருங்கள்,சுவையாக,தெளிவாக ...................................!நன்றி!!!!

    ReplyDelete
  5. மெயின் ஸ்டோரி எ விட்டு விட்டு மற்றதை ஜவ்வு மாதிரி போகுது...

    ReplyDelete
  6. மெயின் ஸ்டோரி எ விட்டு விட்டு மற்றதை ஜவ்வு மாதிரி போகுது...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.