Friday, May 18, 2012

முருக வேட்டை_10


"தாயே..”

முருகர் வேடத்தில் இருந்த குழந்தை அழைத்தது

”மகனே”

“பத்திரமாக என்னை மலையில் கொண்டு போய் விட்டு வருவாயா?”

கவிதாவிற்கு கண்ணீர் முட்டியது.

“என் கண்ணே, இந்த அம்மாவுடனே நீ இருக்கக்கூடாதா? உன்னை கூடவே வைத்துக்கொள்ளும் அருகதையற்றவளா இந்தப் பேதை?”

முருகர் வேடத்தில் இருந்த குழந்தை சிரித்தது.

“நான் இருக்க வேண்டிய இடம் குன்று தானே தாயே?”

“முருகா..உன் விருப்பம் அதுவென்றால் இனி நான் சொல்ல என்ன இருக்கின்றது?”

பதறியபடி கண் விழித்தாள் கவிதா. சரவணனும் திடுக்கிட்டு மடியில் படுத்திருந்த கவிதாவைப் பார்த்தான்.

”என்ன அச்சு? என்ன ஆச்சு?”

“ஒ..ஒன்னுமில்லை..கனவுன்னு நினைக்கிறேன்” சொல்லியபடியே எழுந்தாள் கவிதா.

“என்ன கனவு?”

“நான் ஏறக்குறைய அவ்வையார் வேஷத்தில் இருந்தேன். அப்போ....” சொன்னாள் கவிதா.

சரவணன் சிரித்தான்.“லூசு..லூசு..நானே ஒரு நிமிசம் பதறிட்டேன்..சரி, நான் கிளம்பறேன்”

“சரி”என்றாள் ஏதோ யோசனையுடன்.

சரவணன் வெளியேறியதும் பூஜை ரூம் நோக்கி நடந்தாள். அங்கேயிருந்த முருகர் படத்தை உற்றுப் பார்த்தபடியே நின்றாள்.

‘என்ன இது...என் குழந்தை எனக்கில்லையா? என்ன சொல்கிறாய் நீ?’ யோசிக்கும்போதே கண்ணீர் முட்டியது.

‘எல்லோரும் கணவன் மாதிரியோ அப்பா மாதிரியோ குழந்தை வேண்டும் என நினைப்பார்கள். நான் உன்னை மாதிரியே அல்லவா ஒரு குழந்தையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன சொல்கிறாய் நீ?’

எதிரே இருந்த முருகன் எதுவும் சொல்லாமல் சிரித்துகொண்டேயிருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------

பாண்டியன் கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் கீழே பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தினான்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான்.

முத்துராமனுக்குத் தெரிந்த நபர் தான் கொலையாளி என்றால், பாண்டியனை முத்துராமனுக்குத் தெரியும். 

பாண்டியன் யார்? ஒரே ஆஃபீசில் நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தாலும், பாண்டியன் பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. முதலில் அதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

சரவணன் தன் ஆஃபீசில் உள்ள டாக்குமெண்ட் கண்ட்ரோல் ரூமின் உள்ளே சென்றான். அங்கே இருந்த ரங்கராஜன் “வாங்க சார்..என்ன இந்தப் பக்கம்..அதிசயமா இருக்கு?” என்று சிரித்தபடியே வரவேற்றார்.

”இல்லே..சும்மா தான்..ஒரு எம்ப்ளாயி டீடெய்ல் பார்க்கணும் சார்”

“யாரு?” கண்ணைச் சுருக்கியபடியே கேட்டார் ரங்கராஜன்.

“செந்தில் பாண்டியன் சார்”

“பாண்டியனா?..என்ன சார், இன்னும் உங்களுக்குள்ள பிரச்சினை முடியலியா?”

“அப்படி இல்லை சார்..இது சும்மா..வேற ஒரு ரீசனுக்காக”

”ம்..என்னா ரீசனோ..” என்று இழுத்தபடியே செல்ஃப்களில் அடுக்கப்பட்டிருந்த ஃபைலை எடுத்தார் ரங்கராஜன்.

சரவணன் பரபரப்புடன் வாங்கிப் பார்த்தான்.

செந்தில் பாண்டியன் - அப்பா பெயர் முருகையன் - திருப்பூர் - பிறந்த தேதி - ஜாதி : SC/ST - பிரம்மச்சாரி-திருப்பூர் முகவரி - சென்னை முகவரி...

வேகவேகமாக கண்ணை ஓட்டினான் சரவணன்.

திருப்பூர்..

முத்துராமனின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்றார்கள். கோவிலுக்குச் சென்றது மருதமலை. பாண்டியனின் ஊர் திருப்பூர்.

இவற்றுக்கு இடையே ஏதாவது தொடர்பு உண்டா? கொங்கு மண்டலம் தாண்டி வேறு ஏதாவது தொடர்பு இருக்குமா?

”என்ன சார்..ஃபைலை எடுத்து வச்சிடவா?”

“ம்..வச்சிடுங்க சார்..தேங்க்ஸ்” என்றபடியே வெளியே வந்தான் சரவ்ணன். யோசித்தபடியே தன் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

முத்துராமன் யாரையோ எதிர்பார்த்துத்தான் மருதமலை போகவில்லை என்றால், நிச்சயம் அவருக்கு அந்த நபர் ஃபோன் செய்திருக்க வேண்டும். அது பாண்டியன் என்றால் பாண்டியனின் நம்பரும் அங்கே இருக்க வாய்ப்பு உண்டு.

சரவணன் உடனே ஆஃபீசினுள் நுழைந்தான். முன்பு இன்ஸ்பெக்டர் விசாரித்த கேஸ் கட்டை தன் டேபிளில் இருந்து எடுத்தான்.

முத்துராமனுக்கு கடைசியாக வந்த நம்பர் என்ன என்று பார்த்தவன் அதிர்ந்தான்.

23242526.

கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பர்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

  1. ராஜேஷ்குமாரின் நாவல் போல விறுவிறுப்பாகச் செல்கிறது வேட்டை...

    ReplyDelete
  2. அப்போ மருதமலைக்கும் பாண்டியணுக்கும் தொடர்பு இருக்கு போல தொடரட்டும் பின் தொடர்கின்றேன்!

    ReplyDelete
  3. கவிதாவின் கனவுக்கு சம்மந்தம் இருக்குமோ ஏக்கமாக இருக்குமோ????

    ReplyDelete
  4. மாம்ஸ், என்ன திடீர்னு கனவு வருது?

    அதுக்கும் கொலைக்கும் ஏதாச்சும் முடிச்சு இருக்கோ?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.