Saturday, February 12, 2011

ஆத்தாவும் தாத்தாவும் (காதலர் தின ஸ்பெஷல்)

நீ வெற்றுக் காலுடன்
நடந்து போகையில் - என்
நெஞ்சில் தைக்கிறது
நெருஞ்சி முள்.

ஒவ்வொரு காதலர் தினம் வரும்போதும் எனக்கு அவர்களின் நினைவு வரும். இந்த வருடம் அந்த நினைவுகள் உங்களுக்காக இங்கே....

எங்கள் ஊரில் ‘ஆத்தா’ வசித்து வந்தார். வயது எப்படியும் 60ஐ தாண்டி இருக்கும். அவர் பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. எல்லோருக்கும் ஆத்தா தான் அவர்.  அவருக்குத் துணையாக இருந்தது அவரின் கணவரான தாத்தா மட்டுமே. அவர்களது பிள்ளைகள் திருமணமாகி வேறு வீட்டில் வசித்து வந்தனர்.

சிறுவர்களான எங்களின் கவனத்தை ஆத்தா கவர்ந்ததுக்குக் காரணம் அவரது ஞாபக மறதி. எந்தவொரு விசயத்தையும் கொஞ்ச நேரத்தில் மறந்து போய்விடுவார். ’கஜினி’க்கு எல்லாமே மறக்கும். ஆனால் இவருக்கு அப்படி அல்ல.

’கடைக்குப் போவோம் எனக் கிளம்பினால் பாதி வழியிலேயே மறந்துவிடுவார். எதிரில் வரும் யாராவது ‘என்னாத்தா இங்க நிக்க?” என்றால் ‘நான் எங்கே போறதுக்கு கிளம்பினேன்னு மறந்துட்டேன்யா’ என்பார். பெரும்பாலும் அவருக்குப் பின்னாலே தாத்தா வந்து கொண்டிருப்பார். ‘கடைக்குப் போறதுக்கு வந்தே, தாயி’ என்று சொல்லி அழைத்துச் செல்வார். அவர் மறக்கவேண்டும் என்பதற்காகவே பேச்சுக் கொடுக்கும் சிறுவர்களும் உண்டு. 

தாத்தா வேலைக்குப் போய்விட்டார் என்றால் கஷ்டம்தான். ஆத்தா திரும்பி வீட்டிற்குப் போய், ஞாபகம் வரவும் மீண்டும் கடைக்குப் போகும். தாத்தா வீட்டில் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆத்தா கண்மாய்க்குப் போனால்கூட நிழல் போல் பின்னாலேயே வருவார்.

அப்படி ஒரு நாள் கண்மாய்க்குப் போன ஆத்தா, தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இடுப்பில் சரியான அடி. தாத்தா தான் தூக்கிக்கொண்டு ஓடினார். என்ன வைத்தியம் பார்த்தும் இனிமேல் நடக்க முடியாது என்று கை விரித்து விட்டார்கள். படுத்த படுக்கை தான்.

ஆறு மாதத்திற்கு மேல் தாத்தா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். எல்லாம் என்றால் காலைக் கடனிலிருந்து, குளிப்பாட்டி புடவை கட்டுவது வரை. ஊரே உச் கொட்டியது. கடவுளும் ஒருநாள் அந்தக் கஷ்டத்திற்கு முடிவு கட்டினார்.

அன்று அதிகாலையிலேயே ஆத்தாவுக்கு இழுக்க ஆரம்பித்தது. ஊர் சனம் வீட்டின் முன் கூடத் தொடங்கியது. தாத்தா, ஆத்தாவின் கையைப் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தபடியே ஆத்தாவின் உயிர் பிரிந்தது. பெண்கள் ஆத்தாவைக் குளிப்பாட்ட தயாரானார்கள். ’எய்யா, கொஞ்ச நேரம் வெளில இரும். குளிப்பாட்டி சாத்தி வச்சுட்டுக் கூப்பிடறோம்’ என்று சொல்லி தாத்தாவை வெளியே அனுப்பினர். ஆத்தாவை தயார் செய்து நாற்காலியில் வடக்குப் பார்த்து சாத்தி வைத்தார்கள்.

ஆத்தாவின் நெற்றியில் பொட்டும் காசும் வைக்க தாத்தாவைத் தேடினார்கள். அவர் வீட்டின் பின்புறம் போனதாக அங்கிருந்த ஒருவர் சொல்ல, பின்னால் போய்ப் பார்த்தார்கள்.

அங்கே தாத்தா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்!



வருங்கால / நிகழ்கால வாழ்க்கைத் துணையை நேசிப்போருக்கு காதலர் தின நல்வாழ்த்துகள்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

  1. எளிய நடை. சிறப்பான கருத்து. படமும் கச்சிதம் நல்லா இருக்குங்க

    ReplyDelete
  2. @தங்கராசு நாகேந்திரன்: நன்றி செல்வனூரான். அந்த கமலா சிவாஜியின் படம் சில வருடங்களாகவே என்னிடம் உண்டு..அன்பும் சந்தோசமும் பொங்கும் படம் அது. இன்று வாய்ப்பு கிடைத்தது, பதிவேற்றி விட்டேன்.

    ReplyDelete
  3. பதிவின் ஆரம்ப வரிகள் அசத்தல்.. நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
  4. கனமான பதிவு. உண்மை அன்புக்கு ஏது வயது.
    முதிர்ந்த வயதில் தான் முழுமையான அன்பு புரியும் போல..

    ReplyDelete
  5. பதிவின் ஆரம்ப வரிகள் அசத்தல்.. நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
  6. @பாரத்... பாரதி...: //பதிவின் ஆரம்ப வரிகள் அசத்தல்.. நீங்கள் எழுதியதா?// அது இன்னொரு கதை..

    நான் கோயம்புத்தூரில் வேலை பார்த்தபோது, திடீரென ‘கவிதைக் கிறுக்கு; பிடித்தது..கவிதையா எழுதித் தள்ளினேன்..அதிலிருந்து என் நண்பர் ஹிசாம் சையது 30 கவிதைகளைத் தேர்ந்தெடுத்தார். அதில ஒன்னுதான் இது..ஆனா அப்புறமா அவர் கேட்டாரு ‘இது உண்மையிலேயே நீ எழுதினதா’. நானோ பயங்கர ஞாபகமறதிக் காரன்..அதனால கன்ஃபியூஸ் ஆகிட்டேன். இப்போவரைக்கும் தெரியாது அது நானா எழுதினதா இல்லே, எங்கேயே படிச்சதைக் ‘கொத்தி’ எழுதிட்டேனான்னு..இது ‘பாரதியார் கவிதை’ன்னு நீங்க சொன்னாக்கூட நான் மறுக்க மாட்டேன்..சரி, அதெல்லாம் இருக்கட்டும்..என் கவிதையை ‘ஆரம்ப வரி’ன்னு சொல்லியிருக்கீங்களே..அவ்வ்..அவ்வளவு கேவலமாவா இருக்கு என் கவுதை!

    ReplyDelete
  7. @சே.குமார்: பாராட்டுக்கு நன்றி குமார்.

    ReplyDelete
  8. இது போன்ற உண்மை சம்பவங்களும் உண்டு. காதலர் தினத்திற்கு அருமையான பதிவு.

    ReplyDelete
  9. @cyber security: ஆமாங்க, என் மனதைப் பாதித்த உண்மைச் சம்பவம் இது..நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. கண்கலங்க வெச்சுட்டீங்க...

    இதே போல நானும் ஒரு ஆதர்ச தம்பதியா வாழ்ந்து மடியனும்னு தான் ஆசை...ஆனா பாருங்க ஊருக்குள்ள பொண்ணே குடுக்க மாட்டேன்கிறாங்க

    ReplyDelete
  11. @டக்கால்டி:நல்லவங்களுக்கு எப்பவுமே சோதனைதான் பாஸ்..!

    ReplyDelete
  12. அருமையான பதிவு பாஸ்!
    லேட்டா வந்துட்டேன்!
    ம்ம்ம் நாமளும்தான்...சரி விடுங்க பாஸ்..! :-)

    ReplyDelete
  13. கலைஞரின் காதல் !!!http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

    ReplyDelete
  14. @ஜீ...: நீங்களுமா..தேடுங்க..தேடுங்க.. தேத்துற அளவுக்கு விவரம் பத்தாதவங்க, வீட்ல தேத்திக் கொடுத்தா அன்பை பொழிஞ்சிக்க வேண்டியது தான்!

    ReplyDelete
  15. @ஆகாயமனிதன்..: வருகைக்கும் லின்க்குக்கும் நன்றி ஆகாயம்!

    ReplyDelete
  16. நெகிழ்வான சம்பவம்..... சரியாத்தான் போட்டிருக்கீங்க.....

    ReplyDelete
  17. @பன்னிக்குட்டி ராம்சாமி: பாராட்டுக்கு நன்றி ராம்சாமி சார்!

    ReplyDelete
  18. @கோவை நேரம்: உண்மைதாங்க..நமக்கெல்லாம் ரோல் மாடல் அவங்க.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.